வட்டிப்பணம் ரூ.8 கோடி; ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய பி.எப்., நிலுவை; இழப்புக்கு மேல் இழப்பு ஏற்படுவதை தவிர்க்குமா மாநகராட்சி

மதுரை மாநகராட்சியில் ஆசிரியர்கள், அலுவலர்களிடம் 1.4.1990 முதல் 31.3.2019 வரை பிடித்தம் செய்த பி.எப்., தொகை மாநில கணக்காயர் அலுவலம் பரிந்துரை செய்த வங்கிக் கணக்கில் செலுத்தவில்லை. இந்த வகையில் ரூ.20 கோடியே 5 லட்சத்து 52 ஆயிரத்து 815 செலுத்த வேண்டியிருந்தது.

இதுகுறித்து ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட மாநகராட்சி ஆசிரியர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தின.

இதுகுறித்து தினமலர் நாளிதழிலும் தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இதன் எதிரொலியாக 2019க்குப் பின் 3 தவணைகளாக பி.எப்., தொகையை வங்கிகளில் மாநகராட்சி செலுத்தியது.

இதற்கிடையே 29 ஆண்டுகள் தாமதமாக செலுத்தப்பட்டதால் அதற்கான வட்டியையும் கணக்கீடு செய்து ஆசிரியர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இத்தொகையை வழங்கிவிடுவதாக 2024ல் மாநகராட்சி சார்பில் எழுத்துப்பூர்வமாக தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை கிளைக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை வட்டியை செலுத்தவில்லை. இதனால் மீண்டும் போராட்டங்களில் இறங்க ஆசிரியர் சங்கங்கள் திட்டமிட்டு வருகின்றன.

இதுகுறித்து ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கூறியதாவது:

மாநகராட்சியின் மெத்தனத்தால் 29 ஆண்டுகளாக பி.எப்., தொகை செலுத்தாததால் அதற்கான வட்டி ரூ.8 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இதை செலுத்துவதாக மாநகராட்சியும் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தது. இந்த ரூ.8 கோடி மாநகராட்சியின் மெத்தனத்தால் இழக்கப்போகும் மக்கள் வரிப் பணம். தற்போது வட்டியையும் செலுத்தாமல் இழுத்தடித்தால் அத்தொகையும் அதிகரித்து கொண்டே போகும்.

இது, மாநகராட்சிக்கு இழப்புக்கு மேல் இழப்பாக அமையும். எனவே உரிய காலத்தில் மாநில கணக்காயர் அலுவலகம் பரிந்துரைத்த வங்கிக் கணக்கில் செலுத்த முன்வர வேண்டும்.

இல்லையெனில் மீண்டும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

Advertisement