வாழை தோட்டத்தில் சந்தன மரம் கடத்தல்; ஏழு பேருக்கு ரூ. 5 லட்சம் அபராதம்

ஊட்டி : மசினகுடி வாழை தோட்டத்தில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டு பதுக்கியது தொடர்பாக, ஏழு பேருக்கு வனத்துறையினர், 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி காந்தள் பகுதியை சேர்ந்த பாபு என்பவர் சந்தன மரக்கட்டைகள் வைத்திருப்பதாக, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. ரேஞ்சர்கள் சசிக்குமார், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட வனத்துறை குழுவினர் அவரது வீட்டுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். சாக்கு பைகளில், 25 கிலோ எடையிலான சந்தன மர துண்டுகள் இருந்தன. வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், 'பாபு தனது நண்பரான மெயின் பஜாரை சேர்ந்த ரபீக்,53, என்பவருடன், வாழை தோட்டம் சென்று இவற்றை வாங்கி வந்தார்,' என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, வாழை தோட்டம் பகுதியில் நடந்த விசாரணையில், ' மசினகுடி வாழை தோட்டத்தை சேர்ந்த நந்தகோபால், 23, அவரின் கூட்டாளிகளான, கார்த்திக்,29, சந்தோஷ்,35, மணிகண்டன்,25, விஜய்,29, ஆகியோர், அப்பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் சட்ட விரோதமாக சந்தன மரங்களை வெட்டி ஊட்டியில் வசிக்கும் பாபுவிடம் தவணை முறையில் கொடுத்து பதுக்கி வைத்துள்ளனர்,' என, தெரிய வந்தது.

மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின்படி, ஊட்டி தெற்கு வனச்சரகத்தில் பாபு உட்பட, 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement