இலக்கிய மறுமலர்ச்சியின் பிறப்பிடம் பாலக்காடு; கேரள முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம்

பாலக்காடு : ''இலக்கிய மறுமலர்ச்சியின் பிறப்பிடமாகும் பாலக்காடு,'' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

கேரள மாநிலம், பாலக்காடு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அருகே, ஐந்து ஏக்கரில், 68 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, வி.டி., பட்டதிரிப்பாடு நினைவு கலாசார மையம் திறப்பு விழா நடந்தது. கலாசாரம் மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சஜி செரியான் தலைமை வகித்தார். மையத்தினை திறந்து வைத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:

இலக்கிய மறுமலர்ச்சியின் பிறப்பிடமாகும் பாலக்காடு. வி.டி., பட்டதிரிப்பாடு, ஒளப்பமண்ணா சுப்ரமணியன் நம்பூதிரிப்பாடு, அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி, ஒ.வி., விஜயன், எம்.டி., வாசுதேவன் நாயர் போன்ற பல பிரபல எழுத்தாளர்களின் பிறப்பிடமாக இந்நகரம் உள்ளது.

எழுத்து உலகிற்கு ஏராளமான நன்கொடைகள் செய்தவர் வி.டி. பட்டத்திரிப்பாடு. தனக்கென எதுவும் எதிர்பார்க்காமல், சமூக நலனுக்காக போராடியவர். அவரின் நினைவாக பாலக்காட்டில் கலாசார மையம் துவங்கியதில் பெருமிதம் கொள்கிறேன்.

இந்த மையம் பாலக்காடு கலாசாரத்துறைக்கு புதிய உத்வேகத்தைத் ஏற்படுத்தும். நிலையான சமூக சூழல் இருந்தால் மட்டுமே, கலை செழித்து வளரும். அதற்கான மையமாக இது மாறும். அப்படி இந்த மையம் மாற வேண்டும். மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இது போன்ற மையங்கள் துவங்கப்படும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், கலால் மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ராஜேஷ், எம்.எல்.ஏ.,க்கள் ராகுல் மாங்கூட்டத்தில், பிரபாகரன், சாந்தகுமாரி, பிரேம்குமார், எம்.பி., ஸ்ரீகண்டன், பாலக்காடு கலெக்டர் பிரியங்கா ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement