திருமாவளவனை விமர்சிப்பதா? தாக்குதலில் ஈடுபட்ட வி.சி.,க்கள்

பெரம்பலுார்: பெரம்பலுாரில் புரட்சித் தமிழகம் கட்சியின் கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். பின், அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் கொடியினை கிழித்தெறிந்தனர். இதனால், இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

பெரம்பலுாரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் புரட்சித் தமிழகம் கட்சி மற்றும் பறையர் பேரவை சார்பில், அக்கட்சியின் மாநில தலைவர் மூர்த்தி தலைமையில், பறையர் வாழ்வுரிமை அரசியல் மாநாடு நடந்தது.

கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தோர் கும்பலாக வந்தனர். அவர்கள், 'புரட்சி தமிழகம் கட்சியின் மாநில தலைவர் மூர்த்தி, கடந்த சில வாரங்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை பற்றி அவதூறாக பேசி வரு கிறார். அதனால், மூர்த்தி பெரம்பலூரில் வைத்து கூட்டம் நடத்தக்கூடாது' என்று கூறி கோஷமிட்டனர். பின், ஏற்கனவே பாதுகாப்புக்காக வந்திருந்த போலீசாரின் தடுப்பை மீறி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த தனியார் ஹோட்டலுக்குள் செல்ல முயன்றனர்.

போலீசார் தடுத்தனர். அதனால், ஹோட்டல் மீது டியூப் லைட், கற்கள் உள்ளிட்டவைகளை வீசினர். இதில், ஹோட்டலின் கண்ணாடிகள் மற்றும் வாயில் கதவு சேதமடைந்தன. தொடர்ந்து, அரங்கத்தின் முன் வைக்கப்பட்டிருந்த புரட்சித் தமிழகத்தின் பேனரையும் கொடியையும் கிழித்து எறிந்தனர்.

இதனால், கதவுகள் உட்புறமாக பூட்டப்பட்டு புரட்சித் தமிழகம் கட்சியின் கூட்டம் நடந்தது. பாதுகாப்புக்காக கூடுதல் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Advertisement