மோடியின் புதிய அணுகுமுறை பாகிஸ்தானுக்கு பாடம்

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 25 சுற்றுலா பயணியர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம், உலகம் முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன்பின், ராணுவ அமைச்சர் மற்றும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிராகவும், அந்நாட்டில் முகாம் அமைத்து செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார். அதன் தொடர்ச்சியாக, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், முப்படைகளின் ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பாக்.,கின் மற்ற சில பகுதிகளிலும் நடத்தப்பட்ட தாக்குதலில், ஏராளமான பயங்கரவாதிகள் ஒழித்து கட்டப்பட்டதுடன், அவர்களின் முகாம்களும் அழிக்கப்பட்டன.
இதற்கு பதிலடியாக பாக்., ராணுவத்தினர் ட்ரோன் வாயிலாக தாக்குதல் நடத்தினாலும், அவற்றை இந்திய ராணுவத்தினர் வெற்றிகரமாக முறியடித்தனர். இதையடுத்து, 'சண்டை வேண்டாம்; சமாதானமாகப் போகலாம்' என்ற முடிவுக்கு பாக்., வந்ததால், போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இருந்தாலும், பயங்கரவாதிகளை ஆதரிக்கும் விஷயத்தில், பாகிஸ்தானின் தில்லாலங்கடி வேலைகளை உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்தவும், குறிப்பாக ஐ.நா., பாதுகாப்பு சபையில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு தெரியப்படுத்தவும், எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் ஏழு பேர் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் பல நாடுகளுக்கு சென்று, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகள் பற்றி விவரிக்க உள்ளனர்.
ஏற்கனவே, உலக நாடுகள் வெறுக்கும் வகையிலும், பாக்.,கை தனிமைப்படுத்த, இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது ஏழு பேர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுஉள்ளன.
இதற்கிடையில், ஆப்பரேஷன் சிந்துார் தொடர்பாக, நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, 'பயங்கரவாதமும், அமைதி பேச்சும் ஒன்றாக நடக்காது. பயங்கரவாதமும், வர்த்தகமும் ஒன்றாக பயணிக்க முடியாது. தண்ணீரும், ரத்தமும் ஒன்றாக செல்ல முடியாது' என்று கூறினார். இது, பாகிஸ்தானை குறிப்பிட்டு மட்டும் அவர் சொல்லவில்லை. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தரும் துருக்கி போன்ற சில நாடுகளை மனதில் வைத்தே சொல்லியுள்ளார்.
மேலும், பயங்கரவாத விஷயத்தில், இந்திய அரசு எந்த விதமான சகிப்புத்தன்மைக்கும் இடம் கொடுக்காது. பாக்.,கின் அணு ஆயுத மிரட்டல்களுக்கும் பயப்படாது என்பதையும் தெரிவித்து உள்ளார்.
அதுமட்டுமின்றி, பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாதத்திற்கும் பாகிஸ்தான் ஆதரவு தெரிவிக்கும் வரை, அந்நாட்டுடன் எந்தப் பிரச்னை குறித்தும் பேச்சு நடத்தப்படாது. பயங்கரவாதிகளின் தாக்குதலை சகித்துக் கொண்டே, இரு நாட்டு பிரச்னைகள் தொடர்பாக துாதரக ரீதியான பேச்சுகளை தொடரும் பழைய நடைமுறை, இனியும் பின்பற்றப்படாது என்பதையும் ஆணித்தரமாக கூறியுள்ளார்.
இதன் வாயிலாக, இந்தியாவின் அணுகுமுறையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டிருப்பதை அறியலாம். இருப்பினும், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட, அமெரிக்க நிர்வாகம் தலையீடு; அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பின் பங்கு என்ன என்பது பற்றி பிரதமர் மோடி எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்பட, வர்த்தக விஷயத்தை ஒரு கருவியாக பயன்படுத்தினோம் என்ற அமெரிக்காவின் கருத்தை, மத்திய அரசு நிராகரித்துள்ளது பாராட்டத்தக்கது.
எது எப்படியோ, பாகிஸ்தான் விஷயத்தில் மத்திய அரசு ஒரு உறுதியான, கடுமையான நடவடிக்கை எடுத்ததும், பழைய நடைமுறையை மாற்றி, புதிய அணுகுமுறைகளை பின்பற்றி இருப்பதும் பாராட்டத்தக்கதே.
மேலும்
-
பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம்!
-
ஈரோடு, பல்லடம் இரட்டைக்கொலை சம்பவங்களில் 4 பேர் கைது!
-
தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
-
பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்கணும்; முதல்வர் அறிவுறுத்தல்
-
20 பெண்களை சீரழித்த தி.மு.க., நிர்வாகி: இ.பி.எஸ்., காட்டம்!
-
ஒழுக்கநெறிகள் ஏன் வேலை செய்யாது?