குடும்ப பிரச்னை வழக்கிற்காக பேராசிரியரை சஸ்பெண்ட் செய்தது சரியல்ல: ஐகோர்ட்

சென்னை : 'குடும்ப பிரச்னை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறி, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது சரியல்ல' என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பேராசிரியர் திருநாவுக்கரசு. கடந்த 2023 ஏப்ரல், 30ம் தேதி பணி ஓய்வு பெற இருந்தார்.

வழக்கு பதிவு



அவரது மருமகள் அளித்த வரதட்சணை கொடுமை புகாரில், பேராசிரியர் திருநாவுக்கரசு, அவரது மகன் உள்ளிட்டோருக்கு எதிராக, சென்னை செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை காரணம் காட்டி, பேராசிரியர் திருநாவுக்கரசுக்கு எதிராக, குற்ற குறிப்பாணை பிறப்பித்த பல்கலை நிர்வாகம், அவரை பணியிடை நீக்கம் செய்து, ஓய்வு பெறுவதற்கு நான்கு நாட்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, திருநாவுக்கரசு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 'குடும்ப பிரச்னை தொடர்பான வழக்கை காரணம் காட்டி பணியிடை நீக்கம் செய்ய முடியாது.

'எனவே, பணியிடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்படுகிறது' எனக்கூறி, பணி ஓய்வு பெற அனுமதிக்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, பல்கலை நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் விசாரித்தனர்.

அப்போது, திருநாவுக்கரசு தரப்பில் வழக்கறிஞர் என்.மனோகரன் ஆஜராகி, 'தனி நீதிபதி உத்தரவை அடுத்து, பணி ஓய்வு பெற அனுமதித்தாலும், ஓய்வூதிய பலன்கள் இதுவரை வழங்கப்படவில்லை' என்றார். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பொதுநலன்



பொதுநலன் சார்ந்திருந்தால் மட்டுமே பணியிடை நீக்கம் செய்ய முடியும் என, பல்கலை விதிகளில் கூறப்பட்டுள்ள நிலையில், குடும்ப பிரச்னை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்வதில் என்ன பொதுநலன் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

தனி நீதிபதி, இதை கருத்தில் கொண்டுதான் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்துள்ளார். எனவே, பல்கலையின் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. பேராசிரியருக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை, 12 வாரங்களில் பல்கலை நிர்வாகம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement