சரமாரியாக சலுகைகளை வழங்கி தமிழக நிறுவனங்களை ஈர்க்க முயற்சி குஜராத், ஆந்திராவை சமாளிக்குமா அரசு?

சென்னை : ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தியில் தமிழகம் முன்னணியில் உள்ள நிலையில், அந்த துறை நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க குஜராத், ஆந்திரா மாநிலங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.
இந்த போட்டியை சமாளிக்க, தமிழக அரசிடம், ஜவுளி தொழில் துறையினர் சலுகைகளை எதிர்பார்க்கின்றனர்.
குஜராத், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள், ஜவுளி துறையில் முதலீடுகளை ஈர்க்க, முதலீட்டு மானியம், வட்டி மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குவதாகவும், தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய வருமாறும், தமிழக நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன.
இதனால், தமிழக ஜவுளி நிறுவனங்கள் அம்மாநிலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியைச் சமாளிக்க, தமிழகத்தில் ஜவுளி துறையில் புதிய முதலீடுகளை செய்வதற்கு அரசிடம் சலுகைகளை, தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறியதாவது:
ஜவுளி துறையில் புதிய முதலீடுகளை செய்வதற்கு வட்டி மானியம், முதலீட்டு மானியம், பத்திரப்பதிவு கட்டண விலக்கு, குறைந்த மின் கட்டணம் ஆகிய சலுகைகளை தமிழக அரசு வழங்க வேண்டும். மேலும், தயார் நிலை தொழிற்கூடம், கழிவுநீர் வெளியேற்றம், தெரு விளக்கு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய ஜவுளி பூங்காக்களை உருவாக்க வேண்டும்.
ஜவுளி துறையில், ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் அதிநவீன இயந்திரங்கள் வந்துள்ளன. அவை, சீனா, தைவான், ஜப்பானில் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால், ஒரு மணி நேரத்தில், 50 துணி தைப்பதற்கு பதில், 70 துணிகளை தைக்க முடியும். எனவே, தமிழக அரசு, ஊக்குவிப்பு சலுகைகளை வழங்கினால், தற்போது, 40,000 கோடி ரூபாயாக உள்ள திருப்பூர் ஏற்றுமதி, ஒரு லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக நுாற்பாலைகள் சங்க முதன்மை ஆலோசகர் கே.வெங்கடாசலம் கூறியதாவது:குஜராத், ம.பி., மஹாராஷ்டிரா, ஆந்திர மாநிலங்களில் ஜவுளி துறையில் முதலீடு செய்தால், 10 - 35 சதவீதம் வரை மூலதன மானியம் வழங்கப்படுகிறது. வட்டி மானியம் கிடைக்கிறது. மின்சார வரி விலக்கு அளிக்கப்படுவதுடன், மின் கட்டணமும் குறைவாக வசூலிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களின் அரசு பிரதிநிதிகள், கோவை போன்ற நகரங்களுக்கு வந்து, தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்யுமாறு ஜவுளி துறையினருக்கு அழைப்பு விடுகின்றனர். தமிழக நிறுவனங்கள், அங்கு புதிய ஆலை அமைத்தால், புதிய முதலீடாக கருதி சலுகைகள் கிடைக்கும். எனவே, தமிழகத்தில் ஜவுளி துறை தொடர்ந்து சிறப்பாக செயல்பட, மற்ற மாநிலங்களில் வழங்குவது போல், தமிழக அரசும் சலுகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே அனைத்திற்கும் முடிவு: பாக்.கை நெருக்கும் இந்தியா
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 சரிவு; இன்றைய நிலவரம் இதோ!
-
தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம்; திரளான பக்தர்கள் தரிசனம்!
-
தமிழகத்தில் தொடரும் கனமழை; சுவர் இடிந்து ஒருவர் பலி
-
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
-
பாரதி ஆங்கிலப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை