குட்டீஸ்கள் விரும்பும் குகை 'ரிசார்ட்'

மனம் வெறுமையாக இருக்கிறதா, பணி அழுத்தமா, காலை முதல் இரவு வரை பணியாற்றியும் பணியில் திருப்தி இல்லையா, எதை பார்த்தாலும் எரிச்சலாக இருக்கிறதா, அப்படி என்றால் உங்களுக்கு ஓய்வு தேவை என, அர்த்தம். ஓய்வுக்கு நீங்கள் நேரம் ஒதுக்கியே ஆக வேண்டும். உங்களை குஷிப்படுத்த பெங்களூரில் பல இடங்கள் உள்ளன.

ஓய்வெடுக்க செல்லும் இடங்கள், மனதுக்கும், உடலுக்கும் இதமாக, புத்துணர்ச்சி அளிக்க கூடியதாக இருக்க வேண்டும். பெங்களூரில் இருந்து சில கி.மீ., துாரத்தில், இயற்கையின் மடியில் சில ரிசார்ட்டுகள் உள்ளன.

இங்கு கிரிக்கெட், கால் பந்து, டேபிள் டென்னிஸ், வாலிபால் உட்பட, பல்வேறு விளையாட்டுகளை விளையாடி பொழுது போக்கலாம். உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்களுடன் இங்கு செல்லலாம். விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழிக்கலாம்.

'ஏரியா 8 3 ' ரிசார்ட்



பெங்களூரின், பன்னரகட்டா சாலையில் 20 கி.மீ., துாரத்தில், பில்வாரதஹள்ளியில் , 'ஏரியா 83' என்ற ரிசார்ட் உள்ளது. வாகனத்தில் சென்றால் ஒரு மணி நேரத்தில் அங்கு செல்லலாம். காலை 10:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை இங்கு பொழுது போக்கலாம். நீச்சல் குளத்தில் நீச்சலடிக்க காலை 11:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை அனுமதி உண்டு.

நீரில் விளையாடும் சாகச விளையாட்டுகள் இங்குள்ளன. இதில் பங்கேற்கலாம். கண்களுக்கு குளிர்ச்சியான, இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள, 'ஏரியா 83' ரிசார்ட் மிகவும் அற்புதமானது. தங்களின் அன்புக்குரியவர்களுடன், உல்லாசமாக பொழுது போக்க தகுந்த இடமாகும்.

திருமண வரவேற்பு, பிறந்த நாள் பார்ட்டி, திருமண ஆண்டு விழா, அலுவலகம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள், மீட்டிங் உட்பட, மற்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம். இதற்கான அனைத்து வசதிகளும் இங்குள்ளன.

எப்படி செல்வது?



பெங்களூரின், பன்னரகட்டா சாலையில் 20 கி.மீ., தொலைவில், பில்வாரதஹள்ளி கிராமத்தில் ஏரியா 83 ரிசார்ட் அமைந்துள்ளது. இங்கு செல்ல போதுமான வாகன வசதி உள்ளது. சொந்த வாகனம் இருந்தால் பெஸ்ட்.

அனுமதி நேரம்: காலை 10:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை. தொலைபேசி எண்: 88846 08383, 080 - 4680 9726

குகை ரிசார்ட்



பெங்களூரில் உள்ள சொகுசு விடுதிகளில், குஹாந்தரா ரிசார்ட்டும் ஒன்றாகும். குகை போன்ற வடிவில் உருவாக்கப்பட்ட, இந்தியாவின் முதல் ரிசார்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு க்வாட் பைக்கிங், ஜிப் - லைன், குதிரை சவாரி உட்பட, 10 க்கும் மேற்பட்ட சாகச விளையாட்டுகள் உள்ளன. இவற்றில் பங்கேற்கலாம்.

ரிசார்ட்டில் டிஸ்கோ - ரெயின் டான்ஸ் மிகவும் பிரபலம். பாறைக்குள் மிதமான ஒளியில், இந்த நடனம் நடக்கும்.

இது அற்புதமான அனுபவத்தை அளிக்கும். பாறைக்குள் வரலாற்று சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த ரிசார்ட்டும் இயற்கையான சூழ்நிலையில் அமைந்துள்ளது.

தங்கும் அறைகளும் உள்ளது. இந்த ரிசார்ட் உங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு, மிகவும் பிடிக்கும்.

எப்படி செல்வது?



பெங்களூரு தெற்கு தாலுகா, கனகபுரா பிரதான சாலையில், 27 கி.மீ., தொலைவில் குஹாந்தரா ரிசார்ட் உள்ளது. பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து, 32 கி.மீ., தொலைவில் ரிசார்ட் அமைந்துள்ளது.

இங்கு இறங்கினால், பஸ் அல்லது தனியார் வாகனங்களில், ரிசார்ட்டை அடையலாம். நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும், கனகபுரா பிரதான சாலைக்கு பி.எம்.டி.சி., பஸ் வசதி உள்ளது. ஆட்டோ, வாடகை கார்கள் இயக்கப்படுகின்றன.

அனுமதி நேரம்: காலை 9:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை தொலைபேசி: 97409 98981, 97409 98982

அனன்யா ரிசார்ட்



பெங்களூரின் சூப்பரான சொகுசு ரிசார்ட்களில், அனன்யா ரிசார்ட்டும் ஒன்றாகும். இதுவும் மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும். இந்த ரிசார்ட்டும் கூட, இயற்கையின் மடியில் அமைந்துள்ளது. சுற்றுலா பயணியருக்கு, பல சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

அமைதியான சூழ்நிலையில், இயற்கையை ரசித்தபடியே சுவையான சிற்றுண்டி சாப்பிடலாம்.

அதன்பின் குதிரை சவாரி, ஜிப் லைன் உட்பட, பல சாகச விளையாட்டுகளில் பங்கேற்கலாம். மதியம் 1:00 மணிக்கு அருமையான மதிய உணவு கிடைக்கும். உணவை முடித்து கொண்டு, நீச்சல் குளத்தில் நீந்தி விளையாடலாம்.

அதன்பின் அமைதியாக ஓய்வெடுக்கலாம். நீர் சாகச விளையாட்டுகளும் இங்குள்ளன. சுற்றுலா பயணியரை மகிழ்விக்க, டிஸ்கொதே, இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. மாலை 4:00 மணிக்கு சூடான டீ அருந்தியபடி, குடும்பத்தினர், நண்பர்களுடன் பேசியபடி பொழுது போக்கலாம்.

எப்படி செல்வது?



பெங்களூரின், கோரமங்களா 5வது பிளாக்கில், அனன்யா ரிசார்ட் உள்ளது. கப்பன் பூங்காவில் இருந்து, 8 முதல் 10 கி.மீ., எம்.ஜி., சாலையில் இருந்து, 6 கி.மீ., தொலைவில் உள்ளது. பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ளது. ரிசார்ட்டுக்கு செல்ல, பி.எம்.டி.சி., பஸ்கள், வாடகை கார், ஆட்டோ வசதியும் ஏராளம்.


தொலைபேசி எண்:95423 5353

-நமது நிருபர் -5

Advertisement