அரசு கல்லுாரி மாணவர் சேர்க்கை: உள்ளூர் மாணவர்களுக்கு முக்கியத்துவம்; பெற்றோர் எதிர்பார்ப்பு

கூடலுார்; 'கூடலுார் அரசு கல்லுாரியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், உள்ளூர் மாணவர்கள் சேர்க்கைக்கு முக்கியத்துவம் தர வேண்டும்,' என, வலியுறுத்தி உள்ளனர்.

கூடலுார் ஆமைக்குளம் பகுதியில், பாரதியார் பல்கலைக் கழக கலை மற்றும் அறிவியல் உறுப்பு கல்லுாரியை, 2003ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, கோழிப்பாலம் பகுதியில், வருவாய் துறை சார்பில், 15 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டு வகுப்பறை, கட்டடங்கள் கட்டப்பட்டது. தற்போது கல்லுாரி ஆமைக்குளம், கோழிப்பாலம் பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இக்கல்லுாரியில், 2018--19ல் அரசு கல்லுாரியாக மாற்றப்பட்டது. தொடர்ந்து, கல்லுாரிக்கு தேவையான உபகரணங்கள் வாங்கவும், ஆய்வகங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. கல்லுாரியில் புதிய கம்யூட்டர்கள் ஆய்வ உபகரணங்கள் போதுமானதாக இல்லை.

இங்கு, ஆண்டுதோறும், 1000 மாணவர்கள் சேர்க்கை நடந்தது. கல்லுாரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பித்த வெளியூர் மாணவர்கள் கல்லுாரியில் சேரவில்லை என்றால், கல்லுாரி நிர்வாகம் உள்ளூர் மாணவர்கள் உடனடியாக அழைத்து அனுமதி வழங்கி வந்தது.

ஆனால், கடந்த ஆண்டு இம்முறை பின்பற்றப்பட வில்லை. இதனால், பல மாணவர்கள் தனியார் கல்லுாரிகளில் சேர்ந்துவிட்டனர். மாணவர்கள் சேர்க்கையில், 40 சதவீதம் குறைந்தது.

நடப்பாண்டும் இம்முறையை பின்பற்றினால், மாணவர்கள் சேர்க்கை மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க, இக்கல்லுாரியில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த வெளியூர் மாணவர்கள் சேரவில்லை எனில், கல்லூரி நிர்வாகம் உள்ளூர் மாணவர்கள் உடனடியாக அழைத்து அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'மாணவர் சேர்க்கையில், ஏற்கனவே, பின்பற்றி வந்த நடைமுறை தவிர்க்கப்பட்டதால், மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்தது. எனவே, நடப்பு ஆண்டு உள்ளூர் மாணவர் சேர்க்கைக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்,' என்றனர்.

27ம் தேதி கடைசி நாள்

கல்லுாரி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மாணவர்கள் கல்லுாரியில் சேர்வதற்கான இணைய வழியில் விண்ணப்பங்களை பதிவு செய்ய, கூடலுார் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் சேர்க்கை உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது. அரசு கல்லுாரியில் சேர விரும்பும் மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பிக்க, 27ம் தேதி கடைசி நாளாகும்,' என, கூறப்பட்டுள்ளது.

Advertisement