மலை மாவட்ட மக்களை அச்சுறுத்திய கனமழை; அடிக்கடி தொடரும் மின் தடையால் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால், பல இடங்களில் மரங்கள் விழுந்து வருவதால், அவற்றை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.


தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில், கேரளா மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள, பந்தலுார், கூடலுார் பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பலத்த காற்று மற்றும் மேகமூட்டம் நிலவி வருவதால் மக்களின், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுத்தும் பொன்னானி மற்றும் வெள்ளேரி பகுதி ஆறுகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 'ஆற்றில் இறங்கவோ; குளிக்கவோ அல்லது மீன் பிடிக்கவோ யாரும் செல்ல கூடாது,' என, எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சேரங்கோடு மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சிகள் மூலம் வாகனங்களில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒலி பெருக்கியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை கலெக்டர் சுரேஷ் கண்ணன் தலைமையில், அனைத்து துறை அதிகாரிகள், 'மரம் வெட்டும் இயந்திரங்கள், பொக்லைன், மணல் மூட்டைகள் அடங்கிய பைகள், உணவு பொருட்கள் மற்றும் மருத்துவதுறை 24 மணிநேரம் தயாராக இருக்கவும் அறிவுறுத்தி உள்ளனர்.

தொடர்ந்து, பொன்னானி ஆறு, நிலச்சரிவு ஏற்படும் கூவச்சோலை பகுதியில் தொடர் கண்காணிப்பு பணி நடக்கிறது. உப்பட்டி மின்வாரிய எல்லைக்கு உட்பட்ட உப்பட்டி, சேலக்குன்னா, வாழவயல், பொன்னானி, பந்தபிலா, அம்மன்காவு உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து மின்பணியாளர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

பந்தலுாரில் சேரம்பாடி பாலவாடி வளைவு என்ற இடத்தில், அரசு பள்ளியின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. தேவாலா டான்டீ பகுதியில் ராசம்மாள் என்பவருடைய வீட்டின் மீது மின்கம்பம் உடைந்து விழுந்தது.

பந்தலுார் அருகே நெலாக்கோட்டை சாலையோரம் இருந்த மூங்கில் புதர் நேற்று முன்தினம் நள்ளிரவு அடியோடு சாய்ந்ததில், தமிழக கேரளா போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் உதவியுடன், மூங்கில் புதரை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். கடும் மேகமூட்டம் நிலவி வருவதால், வாகன ஓட்டுனர்கள் சிரமப்பட்டு வாகனங்களை இயக்கினர்.

குன்னுார்



குன்னுார் அருகே கேத்தி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ராட்சத கற்பூர மரம் சாலையில் விழுந்தது. தகவலின் பேரில் குன்னுார் தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று, மரங்களை நீண்ட நேரம் போராடி வெட்டினர். தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் மரங்களை கயிறு கட்டி இழுத்து தள்ளி சாலையோரம் ஒதுக்கினர். இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.

இதே போல, சானிடோரியம் அருகே, மின்கம்பங்கள் மீது கற்பூர மரம் விழுந்தது. இதனால் சுற்றுப்புற பகுதிகளில், 2 மணி நேரம், மின்தடை ஏற்பட்டது. தீயணைப்பு துறை மரத்தை வெட்டினர். எடப்பள்ளி மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பங்கள் சரி செய்து மின் வினியோகம் வழங்கினர்.

கோத்தகிரி



கோத்தகிரி- ஊட்டி இடையே, மைனலா சந்திப்பு பகுதியில், 20க்கும் மேற்பட்ட, அபாய மரங்கள், போதிய வேர்பிடிப்பு இல்லாமல் உள்ளன. காற்றுடன் பலத்த மழை பெய்யும் பட்சத்தில், மரங்கள் விழுந்து, போக்குவரத்து பாதிப்பு உட்பட அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது. அபாய மரங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பது வேண்டும்.

இதேபோல, கார்ஸ்வுட் பகுதியில் நேற்று முன்தினம் கனமழையுடன், பலத்த சூறாவளி காற்று வீசியது. அதில், சாலையில் கீழ்ப்பகுதியில், போதிய வேர் பிடிமானம் இல்லாத, வானுயர்ந்த மரம், சாலையை பெயர்த்து விழுந்தது.

இதனால், அசம்பாவிதம் ஏற்படவில்லை. இருப்பினும், சாலையில் தடுப்பு சுவர் இடிந்தது. தகவல் அறிந்த, குறிப்பிட்ட இடத்தில், மணல் மூட்டைகளை அடுக்கி, எச்சரிக்கை பலகை வைத்தனர். கோத்தகிரக்கு உட்பட தெங்குமரஹாடா ஆற்றில், மக்கள் பரிசலில் கிராமத்துக்கு சென்றனர்.

கூடலுார்



கூடலுார் ஓவேலி சாலை பாலவாடி அருகே, காலை, 11:00 மணிக்கு சாலையோரம் இருந்த மரம் சாய்ந்து, மின்கம்பம் சேதமடைந்து, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். ஆமைக்குளம் பகுதியில், மின் கம்பி மீது மரம் விழுந்தது. மின் சப்ளை பாதிக்கப்பட்டதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.



- நிருபர் குழு-

Advertisement