புற்றுநோய் கண்டறியும் திட்டம்; 43 பேருக்கு ஆரம்ப கட்ட அறிகுறி
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் துவங்கியுள்ள புற்றுநோய் கண்டறியும் திட்டம் வாயிலாக, 3,192 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 43 பேருக்கு ஆரம்ப கட்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.
மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணிகள் துறை சார்பில், புற்றுநோய் கண்டறிவதற்கான விரிவாக்க திட்டம், கடந்த மாதம், தமிழகத்தில், திருப்பூர் உள்பட 12 மாவட்டங்களில், 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கியது.
திருப்பூர் மாவட்டம் முழுதும், 124 துணை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் திட்டத்தின் கீழ் பரிசோதனை நடக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்ட இருபாலினத்தினரும், புற்றுநோய் பரிசோதனைகளை இலவசமாக செய்து கொள்ளலாம்.
பத்து நாட்களில், 8,566 பேர் பரிசோதனைக்கு அழைக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டனர். இவர்களில், 3,192 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். இதில், 2,782 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இல்லை. 43 பேருக்கு ஆரம்ப கட்ட அறிகுறிகள் உள்ளன. இவர்களுக்கு மருந்து, மாத்திரை வழங்கப்படும். தேவையிருப்பின், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அடுத்த கட்ட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
துவக்கத்திலேயே குணப்படுத்தலாம்
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதுடன், அதற்கான தடுப்பு நடவடிக்கையை உடனடியாக துவங்க, முன்னெச்சரிக்கைக்காக, புற்றுநோய் கண்டறியும் திட்டம் சுகாதாரத்துறையால் துவங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், 30 வயதுக்கு மேலுள்ள, 6.92 லட்சம் பெண் பயனாளிகள், கர்ப்பப்பை வாய், மார்பக புற்றுநோய் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். 18 வயதுக்கு மேலுள்ள ஆண்கள், 10.22 லட்சம், பெண் பயனாளிகள், 9.81 லட்சம் என, 20 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
துவக்கத்தில் கண்டறிந்து அதற்கான தடுப்பு, சிகிச்சை முறைகளை துவக்கி விட்டால், புற்றுநோய் குணப்படுத்த கூடியது தான். சரியான நேரத்துக்கு உடலுக்கு தேவையான சரியான மருத்துவம் கிடைக்க வேண்டும் என மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தங்கள் உடலை பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். ஆகையால், புற்றுநோய் பரிசோதனைக்கு வரும்படி தொடர்ந்து அழைத்து வருகிறோம்.
- ஜெயந்தி, துணை இயக்குனர்,மாவட்ட சுகாதார பணிகள் துறை.
மேலும்
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்