இன்டர் மயாமி அணி 'டிரா': கிளப் உலக கோப்பை கால்பந்தில்

மயாமி கார்டன்ஸ்: இன்டர் மயாமி, அல் அஹ்லி அணிகள் மோதிய கிளப் உலக கோப்பை கால்பந்து லீக் போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது.
அமெரிக்காவில், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') சார்பில் கிளப் அணிகளுக்கான உலக கோப்பை 21வது சீசன் நடக்கிறது. மொத்தம் 32 அணிகள், 8 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதி பெறும்.
மயாமி கார்டன்ஸ் நகரில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இன்டர் மயாமி (அமெரிக்கா), அல் அஹ்லி (எகிப்து) அணிகள் மோதின. ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் அல் அஹ்லி அணியின் டிரெஸ்குயட் அடித்த பந்தை, இன்டர் மயாமி அணி கோல்கீப்பர் ஆஸ்கர் உஸ்டாரி சாமர்த்தியமாக தடுத்தார். முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.
பின், 60வது நிமிடத்தில் இன்டர் மயாமி அணிக்கு கிடைத்த 'பிரீ கிக்' வாய்ப்பில் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்சி அடித்த பந்து 'கோல் போஸ்ட்டை' விட்டு விலகிச் சென்றது. இரண்டாவது பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+6வது நிமிடம்) மெஸ்சி துாக்கி அடித்த பந்தை அல் அஹ்லி அணி கோல்கீப்பர் முகமது எல்ஷனாவி, 'கோல் போஸ்ட்டிற்கு' மேலே தள்ளிவிட்டார்.
கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 0-0 என 'டிரா' ஆனது.