இந்தியா 'ஹாட்ரிக்' தங்கம் * ஸ்குவாஷ் இரட்டையரில் புதிய வரலாறு

ஜோஹர்: ஆசிய ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப் மூன்று பிரிவிலும் அசத்திய இந்திய அணி, 'ஹாட்ரிக்' தங்கம் கைப்பற்றியது.
மலேசியாவில் ஆசிய ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் அபே சிங், வேலவன் செந்தில்குமார் ஜோடி இரண்டாவது முறையாக தங்கம் வென்றது.
பெண்கள் அபாரம்
பெண்கள் இரட்டையரில் இத்தொடரின் 'நம்பர்-2' ஜோடி, இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, அனாஹத் சிங் ஜோடி, 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற மலேசியாவின் அய்னா அமனி, இ ஜின் இங் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 8-11 என கோட்டை விட்ட இந்திய ஜோடி, அடுத்த இரு செட்டுகளை 11-9, 11-10 என போராடி வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 2-1 என வென்று, தங்கம் கைப்பற்றியது.
கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் 'நம்பர்-1' இந்தியாவின் அபே சிங், அனாஹத் சிங் ஜோடி, 'நம்பர்-2' ஆக உள்ள மலேசியாவின் அர்னால்டு, சண்டாரை ஜோடியுடன் மோதியது. இதில் இந்திய ஜோடி 2-0 என (11-9, 11-7) வெற்றி பெற்று, தங்கம் வசப்படுத்தியது.
புதிய வரலாறு
இதையடுத்து ஆசிய அல்லது உலக ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப் தொடரில், மூன்று பிரிவிலும் தங்கம் கைப்பற்றிய முதல் அணி என இந்தியா புதிய வரலாறு படைத்தது.

Advertisement