கோல்டன் விசாவில் சலுகையா; மறுக்கிறது யு.ஏ.இ., அரசு

துபாய்: இந்தியர்களுக்கு, 23 லட்சம் ரூபாயில், வாழ்நாள் கோல்டன் விசா வழங்கப்படுவதாக வந்துள்ள செய்திகளை மறுத்துள்ள யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு, இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு, முதலீட்டாளர்கள், திரை, விளையாட்டு பிரபலங்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் என சாதனையாளர்களுக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது.

அந்த நாட்டின் ரியல் எஸ்டேட் தொழிலில் 4.66 கோடி ரூபாய் வரை முதலீடு செய்வர்கள், மிகப்பெரும் தொகையை அந்நாட்டு தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களுக்கும் கோல்டன் விசா வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியா மற்றும் வங்கதேசத்தை சேர்ந்தவர்களுக்கு, கோல்டன் விசாவில் புதிய சலுகை வழங்கப்படுவதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இதன்படி, 23 லட்சம் ரூபாய் செலுத்தினால், வாழ்நாள் குடியுரிமையை பெற முடியும் என, கூறப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை, ஐக்கிய அரபு எமிரேட்சின் குடியுரிமைத் துறை மறுத்துள்ளது. அந்தத் துறை நேற்று வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த, 2019ல் அறிமுகம் செய்யப்பட்ட கோல்டன் விசா தொடர்பான நடைமுறைகள், விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே உள்ள விதிகள் தொடர்கின்றன.

விசா வகைகள், நிபந்தனைகள் மற்றும் விதிகள், ஐக்கிய அரபு எமிரேஸ்ட் அரசின் சட்டங்கள் மற்றும் அமைச்சக முடிவுகளை அடிப்படையாகக் கொண்டவை. நியமன அடிப்படையில் ரியல் எஸ்டேட் அல்லது வணிக முதலீடு இல்லாமல் கோல்டன் விசா வழங்கப்படும். ஆனாலும், கடுமையான பரிசீலனைக்குப் பிறகே, தேர்வு செய்யப்பட்டே வழங்கப்படும்.

விசா நடைமுறைகள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டிலேயே நடக்கிறது. மூன்றாம் தரப்பினருக்கோ, தனியார் அமைப்புகளுக்கோ விசா வழங்கும் நடைமுறையில் எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.

அதனால், புதிய கோல்டன் விசாக்களை, தனியார் அமைப்பு வாயிலாக பரிசீலிப்பதாக வந்த செய்தி தவறு. மேலும், 23 லட்சம் ரூபாய் மட்டுமே கட்டணம் என்பதும் தவறு. அதுபோல, வாழ்நாள் முழுதுக்கும் செல்லுபடியாகும் என்பதிலும் எந்த உண்மையும் இல்லை.

விசாவுக்கு விண்ணப்பிப்போர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யு.ஏ.இ., அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்கவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement