கழிவுநீர் கால்வாயை ஒட்டியுள்ள குடிநீர் தொட்டியால் ஆபத்து

தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலம், ஸ்டேட் பாங்க் காலனி - கைலாசபுரம் சந்திப்பில், சிறுமின் விசை குடிநீர் தொட்டி உள்ளது. அப்பகுதி மக்களின் தண்ணீர் தேவையை, இது பூர்த்தி செய்து வருகிறது.

தினசரி காலை மற்றும் மாலையில், வரிசையாக நின்று தண்ணீர் பிடித்து செல்கின்றனர். இந்நிலையில், தொட்டியை ஒட்டி, கழிவுநீர் கால்வாய் செல்கிறது.

இந்த கால்வாயை முறையாக துார்வாராததால், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கொசு தொல்லையும், துர்நாற்றமும் அதிகரித்து, தண்ணீர் பிடிக்க நிற்கும் பெண்கள் பாதிப்படைகின்றனர்.

ஆழ்துளை கிணற்றை ஒட்டி கழிவுநீர் தேங்கியுள்ளதால், குடிநீரில் கழிவுநீர் கலப்பதற்கும், அதனால் அப்பகுதி மக்கள் தொற்று நோய்களுக்கு ஆளாவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள், 'தண்ணீர் தொட்டி வைத்திருப்பதே பெரிய விஷயம்; இதில் கால்வாயை வேற சுத்தம் செய்ய வேண்டுமா' என கேட்பதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகராட்சி கமிஷனராவது நடவடிக்கை எடுப்பாரா?

- கந்தசாமி, தாம்பரம்.

Advertisement