நெல்லிக்குப்பம் நகராட்சியில் 2 மாதத்திற்கு முன்னரே வரி வசூலில் அதிகாரிகள் தீவிரம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி,குடிநீர் கட்டணம்,தொழில்வரி,குத்தகை,காலிமனை வரி ஆகியவற்றை வருடத்துக்கு இரண்டு தவணையாக செலுத்துவார்கள்.

அதாவது செப்டம்பர் மற்றும் மார்ச் மாதம் இறுதியில் வரி செலுத்துவது வழக்கம். அதிகாரிகளும் அந்த மாதங்களிலேயே வரி வசூலில் தீவிரம் காட்டுவார்கள்.ஆனால் வழக்கத்துக்கு மாறாக ஜூலை மாதத்திலேயே செப்டம்பர் மாதம் செலுத்த வேண்டிய வரியை வசூல் செய்வதில் அதிகாரிகள் தீவிரம் காட்டுகின்றனர்.

கமிஷனர்,மேலாளர் உட்பட அனைத்து அதிகாரிகளும் காலையில் வீடுவீடாக சென்று வரி செலுத்த சொல்லி வலியுறுத்துகின்றனர்.வழக்கத்துக்கு மாறான இந்த நடவடிக்கையால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.மக்கள் வரி கட்டாவிட்டாலும் உயர் அதிகாரிகளுக்கு கணக்கு காட்டுவதற்காக வீடுவீடாக அதிகாரிகள் செல்கின்றனர்.

இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது விரைவில் சட்டசபை தேர்தல் பணிகள் துவங்கிவிடும்.அப்போது மக்களிடம் வரி வசூல் செய்வது சிரமமாக இருக்கும்.எனவே வழக்கத்துக்கு மாறாக ஜூலை மாதத்திலேயே வரி வசூல் செய்ய உயர் அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர்.நாங்கள் வீடுவீடாக சென்றாலும் செப்டம்பர் மாதமே வரியை கட்டுவோம் என மக்கள் கூறுகின்றனர்.எனவே பெயரளவுக்கு பணியாற்ற வேண்டிய நிலையில் உள்ளதாக கூறினர்.

Advertisement