செஸ்: அரையிறுதியில் அர்ஜுன் * 'பிரீஸ்டைல்' தொடரில் முதன் முறையாக...

லாஸ் வேகாஸ்: 'பிரீஸ்டைல்' செஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என வரலாறு படைத்தார் அர்ஜுன்.
'பிரீஸ்டைல்' கிராண்ட்ஸ்லாம் செஸ் டூர், 5 தொடர்களாக நடத்தப்படுகிறது. இதன் நான்காவது தொடர், அமெரிக்காவின் லாஸ் வேகாசில் நடக்கிறது. நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன் உட்பட 16 பேர், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடந்தன.
ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-4' இடம் பெற்ற வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறினர். இதில் அர்ஜுன், உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக்கை சந்தித்தார். முதல் போட்டி 'டிரா' ஆனது. அடுத்த போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய அர்ஜுன், 69 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து, 'பிரீஸ்டைல்' செஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என பெருமை பெற்றார் அர்ஜுன். இதில் அமெரிக்காவின் லெவான் ஆரோனியனை சந்திக்க உள்ளார்.
11 மணி நேரம்
மற்றொரு காலிறுதியில் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் பேபியானோவை எதிர்கொண்டார். முதல் இரு போட்டியில் இருவரும் தலா 1 வெற்றி பெற்றனர். அடுத்து நடந்த 'டை பிரேக்கர்' ஐந்து போட்டி வரை நீண்டது. முதல் 4 போட்டியில் இருவரும் தலா 2 வெற்றி பெற்றனர். 5வது போட்டியில் பிரக்ஞானந்தா, 72வது நகர்த்தலில் தோற்றார். சுமார் 11 மணி நேரம் நடந்த போட்டியில் முடிவில் பிரக்ஞானந்தா 3.0-4.0 என வீழ்ந்தார்.

Advertisement