நீதிபதி யஷ்வந்த் பதவி நீக்கத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு: மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தகவல்

6


புதுடில்லி: ''பண மூட்டை பிரச்னையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கின்றன'' என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு கிரண் ரிஜ்ஜூ நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பல்வேறு அரசியல் கட்சிகளின் அனைத்து மூத்த தலைவர்களுடனும் நான் பேசியுள்ளேன். எந்த உறுப்பினரையும் விட்டுவிட விரும்பாததால், அனைவரையும் நான் தொடர்பு கொண்டு பேசினேன். எனவே இது பார்லிமென்டின் ஒருங்கிணைந்த நிலைப்பாடாக மாறுகிறது.



பண மூட்டை பிரச்னையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கின்றன. அனைத்து அரசியல் கட்சிகளும் அவர் மீதான பதவி நீக்க தீர்மானத்திற்கு முழு ஆதரவு அளிக்கின்றனர். நீதித்துறை ஊழல் ஒரு தீவிரமான மற்றும் மிக முக்கிய பிரச்னை. நீதிபதி வர்மாவை நீக்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் முழு முயற்சி உடன் இருக்கிறது.


நீதித்துறையில்தான் மக்களுக்கு நீதி கிடைக்கும். நீதித்துறையில் ஊழல் இருந்தால், அது அனைவருக்கும் ஒரு தீவிர கவலை. அதனால்தான் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தினோம். எந்தவொரு கட்சியும் ஊழல் நிறைந்த நீதிபதிக்கு ஆதரவாகவோ அல்லது ஊழல் நிறைந்த நீதிபதியைப் பாதுகாப்பதாகவோ தெரியவில்லை.


அவர்கள் இந்த விஷயங்களை எப்படி கையாள வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீதித்துறையில் ஊழல் என்று வரும் போது, நாம் ஒன்றாக நிற்க வேண்டும். எந்தவொரு பாரபட்சமான மனப்பான்மையும் இருக்க முடியாது, அதை ஒரு அரசியல் பிரச்னையாக மாற்றக் கூடாது. இந்த பிரச்னையில் ஒற்றுமை மிகவும் அவசியம். இவ்வாறு கிரண் ரிஜ்ஜூ தெரிவித்தார்.

Advertisement