இந்தியா-பாக்.சண்டை பற்றி டிரம்ப் மீண்டும் கருத்து: பார்லி.யில் பிரதமர் அறிக்கை வெளியிட காங். வலியுறுத்தல்

6

புதுடில்லி: இந்தியா,பாக். போர் குறித்து 70 நாட்களாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வரும் கருத்துகளுக்கு பார்லி.யில் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.



பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாம்களை இந்தியா அழித்தது. 3 நாட்களை கடந்த சண்டை நீடித்த நிலையில், இந்தியா, பாக். ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.


ஆனால், தமது முயற்சியால் தான் இந்தியா, பாக். போர் நிறுத்தம் ஏற்பட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவின் இத்தகைய கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. தற்போது மீண்டும், போரின் போது 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று நினைப்பதாக டிரம்ப் கூறி இருக்கிறார்.


இந் நிலையில் போர் நிறுத்தம் குறித்தும்,சண்டையின் போது நிகழ்ந்ததாக கூறப்படும் சில நிகழ்வுகள் குறித்தும் டிரம்ப் பேசி வருவது குறித்து பார்லி.யில் பிரதமர் மோடி அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.


இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறி இருப்பதாவது:


பார்லி. கூட்டத்தொடர் தொடங்கும் 2 நாட்கள் முன்பு அவர் (டிரம்ப்) இவ்வாறு கூறி இருக்கிறார். 24வது முறையாக இவர் இப்படி கூறி உள்ளார். இப்போது புதியதாக 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.


டிரம்புடன் நட்புடன் இருக்கும் பிரதமர் மோடி, 70 நாட்களாக இதுபோல் கூறி வருவது குறித்து பார்லி.யில் அறிக்கையை வெளியிட வேண்டும்.


இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தி உள்ளார்.

Advertisement