உ.பி.யில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 24 மணிநேரத்தில் 18 பேர் பலி

1

லக்னோ: உ.பி.யில் கடந்த 24 மணி நேரத்தில் மழைக்கு 18 பேர் பலியாகி உள்ளனர்.



உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இடைவிடாது பெய்து வரும் மழை எதிரொலியாக, நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.


மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை, வெள்ளத்தில் மட்டும் சிக்கி கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.


சித்ரகூட் மாவட்டத்தில் அதிக அளவாக 6 பேர் மழைக்கு பலியாகி இருக்கின்றனர். மஹோபா, பண்டா மற்றும் மொராதாபாத் பகுதிகளில் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர். காசிப்பூர், லலித்பீர், கோண்டா பகுதிகளில் தலா ஒருவர் பலியாகி இருக்கின்றனர்.


ஒட்டுமொத்தமாக 24 மணிநேரத்தில் 18 பேர் இறப்புகள் பதிவாகி உள்ளதாக மாநில அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


இதனிடையே, மாநிலத்தின் மீரட், நொய்டா உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்றும் மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement