டி.எஸ்.பி., சுந்தரேசன் வழக்கில் புதிய திருப்பம்; தலைமை காவலர் சஸ்பெண்ட்

9


மயிலாடுதுறை: டி.எஸ்.பி., சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்ட கடிதத்தை, உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் பொதுவெளியில் வெளியிட்டதாக கூறி, தலைமை காவலர் சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐ.ஜி., செந்தில்வேலன் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகளை டி.எஸ்.பி., சுந்தரேசன் முன் வைத்தார். மயிலாடுதுறை எஸ்.பி., ஸ்டாலின் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் சுந்தரேசன் சுமத்தினார். இதற்கு எஸ்.பி., ஸ்டாலின் மறுப்பு தெரிவித்தார்.


இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய மண்டல ஐ.ஜி., ஜோஷி நிர்மல் குமார், தஞ்சாவூர் டி.ஐ.ஜி., ஜியாவுல் ஹக் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். சீருடை பணியாளர் விதிகளை மீறி, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக, சுந்தரேசனை 'சஸ்பெண்ட்' செய்யவும் முடிவு செய்துள்ளனர்.


இதற்கிடையே, காவல் துறையில் அதிகாரிகள் செய்யும் 'டார்ச்சர்' குறித்து, செய்தியாளர்களுக்கு சுந்தரேசன் பேட்டி அளித்ததால், அவருக்கு காவலர்களிடம் ஆதரவு பெருகி வருகிறது.
இந்த சூழலில், டி.எஸ்.பி., சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்ட கடிதத்தை, உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் பொதுவெளியில் வெளியிட்டதாக கூறி, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலைமை காவலராக பணியாற்றும் சரவணன் நேற்றிரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement