விசாரணை நடத்தாமல் டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரையா: ஏற்க முடியாது என்கிறார் அண்ணாமலை

12


நாமக்கல்: ''எந்த விசாரணையும் நடத்தாமல், டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது,'' என பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


நாமக்கல்லில்அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாமக்கல் மாவட்டத்தில் நடந்துள்ள கிட்னி திருட்டு தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். மயிலாடுதுறை டி.எஸ்.பி., சுந்தரேசன் இரண்டு விஷயங்களை கூறினார்கள். எனக்கு தெரியும், சீருடையில் இருக்கும் அரசு அதிகாரிகள் பத்திரிகையில் பேசக் கூடாது.

இன்றைக்கு நிலைமை அதனை எல்லாம் தாண்டி சென்றது. அதனால் தான் நான் உங்களிடம் பேசுகிறேன் என கூறினார். என் வீட்டில் இருந்து அலுவலகம் வரை நடந்து செல்லும் போது எந்த பத்திரிகையையும் நான் கூப்பிடவில்லை. இன்றைக்கு நான் பத்திரிகையை அழைத்து பேட்டி அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளேன்.



இந்த அளவுக்கு அதிகாரிகள் அவரை துன்புறுத்தி இருக்கிறார்கள். எந்த விசாரணையும் நடத்தாமல், டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக உள்துறை அமைச்சராக இருக்கும் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு நீதி பெற்று கொடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


நிருபர்: அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''சர்ச்சையும் ஒன்றும் இல்லை. கருத்துக்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டோம். எல்லோருடைய கருத்துக்களும் பொதுவெளியில் இருக்கிறது. இதில் சர்ச்சைக்கு எல்லாம் ஒன்றுமில்லை. எல்லோரும் ஒரே புள்ளியில் அமைந்து இருக்கிறோம்.

தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்று ஒற்றைப்புள்ளியில் இணைந்து இருக்கிறோம். அது எப்படி இருக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பும், பிறகு எப்படி இருக்க வேண்டும் என்று சம்பந்தபட்ட தலைவர்கள் பேசுவார்கள். எந்த குழப்பமும் இல்லை. எங்களை பொறுத்தவரை தி.மு.க., அகற்றப்பட வேண்டும் என்ற விஷயத்தில் ஒன்றாக இருக்கிறோம்'' என அண்ணாமலை பதில் அளித்தார்.

Advertisement