இன்றும் அ.தி.மு.க., தான் குறி; இ.பி.எஸ்., தானாக பேசவில்லை என்கிறார் திருமா

சென்னை: தினம், தினம் எதிர்க்கட்சிகளிடம் மட்டுமே கேள்வி கேட்கும் வழக்கம் உள்ள திருமாவளவன், இன்று ( ஜூலை 19), 'இ.பி.எஸ்., அவராக பேசவில்லை. அவரை இவ்வாறு யாரோ பேச வைக்கிறார்கள்'' என தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களை திருமாவளவன் சந்தித்தார். நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
நிருபர் கேள்வி: தி.மு.க.,வுக்கு கம்யூனிஸ்ட், வி.சி.க., அடிமை சாசனம் எழுதி கொடுத்துள்ளது என இ.பி.எஸ்., மீண்டும் பேசி உள்ளார். 2 நாட்களுக்கு முன் கூட்டணிக்கு அழைப்பு விடுத்து இருந்தார். வரவில்லை என்பதால் விமர்சித்து உள்ளார்?
திருமாவளவன் பதில்: இது அவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் செயல்திட்டம். அது ஒரு அஜெண்டா. யார் அவருக்கு கொடுத்து இருக்கிறார்கள் என்பது தெரியாது. ஆனால் மக்களை சந்திக்கும் போது, மக்களுக்காக அவர் கோரிக்கைகளை பேசுவதை விட தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது, விமர்சிப்பது என்கிற நிலையில் அவரது உரைகளும், பேட்டிகளும் விளங்குகின்றன.
சாதாரணமான ஆட்களுக்கே இதில் இருக்கும் பின்புலம் குறித்து புரிந்து கொள்ள முடியும். அவராக இதை பேசவில்லை. அவரை இவ்வாறு யாரோ பேச வைக்கிறார்கள் என்று தான் புரிந்து கொள்ள முடிகிறது.
நிருபர்: திருவள்ளூரில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை. போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிறுமியின் பெற்றோர் குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். உங்களுடைய பார்வையில் என்ன?
திருமாவளவன் பதில்: 10 நாட்களில் ஆகியும் குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. போலீசார் விரைந்து செயல்பட வேண்டும். விசாரிப்பதற்கு சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்க வேண்டும்.
குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்து, விரைந்து விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.









