புறப்பட்ட 16 நிமிடங்களிலேயே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறக்கம்: பயணிகள் அவதி

8


ஹைதராபாத்: தாய்லாந்தின் புகெட் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புறப்பட்ட 16 நிமிடங்களுக்கு பிறகு, ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.


தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் விமானம் (Boeing 737 Max 8) இன்று (ஜூலை 19) காலை 6.41 மணிக்கு தாய்லாந்தின் பூகெட்டிற்கு புறப்பட்டது.


ஆனால், புறப்பட்ட 16 நிமிடங்களிலேயே விமானம் மீண்டும் ஹைதராபாத்திற்கே திரும்பி வந்தது. விமானம் தாய்லாந்திற்கு செல்லாமல், மீண்டும் தரையிறங்கியதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. தொழில்நுட்ப கோளாறு தான் அவசர தரையிறக்கத்திற்கு காரணம் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணி ஒருவர் சமூக வலைதளத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:


பயணிகளின் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானங்கள் தாமதம் ஏற்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பு தான் எங்களுக்கு மிக முக்கியம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


கடந்த சில தினங்களாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதும், புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறக்கப்படுவதும், தாமதமாக இயக்கப்படுவதும் பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement