தி.மு.க. அரசின் அலட்சியப் போக்குதான் மிகப்பெரிய வன்கொடுமை: சீமான்

சென்னை:தி.மு.க., அரசின் அலட்சியப் போக்குதான் மிகப்பெரிய வன்கொடுமை என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
அவரது அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள ஆரம்பாக்கத்தில், பள்ளி முடிந்து அருகிலுள்ள பாட்டி வீட்டிற்குத் தனியாக நடந்து சென்ற 10 வயது சிறுமியை, மனச்சான்றற்ற கொடூரன் தூக்கி சென்று வன்கொடுமை செய்த கொடுமை நிகழ்ந்து, ஒரு வாரகாலமாகியும் இதுவரை அக்குற்றவாளியை போலீசார் கைது செய்யாதது கடும் கண்டனத்துக்குரியது. அரசும், ஒட்டுமொத்த சமூகமும் வெட்கித்தலைகுனிய வேண்டிய மிகப்பெரிய மனிதப்பேரவலமாகும்.
பெற்ற குழந்தைக்கு நேர்ந்த பெருங்கொடுமையைச் சொல்லி அழும் தாயின் கதறல் ஒலி நெஞ்சை பிளக்கிறது; எந்த குழந்தைக்கும் இனி நேரக்கூடாது என்ற அத்தாயின் தவிப்புக் கண்களில் ரத்தக்கண்ணீரைப் பெருக்குகிறது. அக்கொடூரன் அலைபேசியில் இந்தி மொழியில் பேசிக்கொண்டிருந்தபோது உடல் முழுவதும் ரத்தக்காயங்களுடன் தப்பி வந்த சிறுமி, வரும் வழியில், அவ்வழி செல்ல முயன்ற மற்றொரு சிறுமியை 'அந்தப்பக்கம் போகாதே!' என தடுத்துக் காப்பாற்றியச்செயல் இதயத்தை நெகிழச்செய்கிறது.
அப்பிஞ்சு நெஞ்சின் உள்ளத்தில் உண்டான கொடுங்காயம் வாழ்நாள் முழுவதும் வடுவாக நின்று வாட்டுமே? யார் அதற்கு மருந்திடுவது? வருங்காலத் தலைமுறைகளின் நெஞ்சத்தில் எதை விதைக்கின்றோம்? எவற்றை நாம் கற்பிக்கின்றோம்? யார் இப்பேரவலத்திற்குப் பொறுப்பேற்பது? தி.மு.க., அரசு பொறுப்பேற்குமா? ஆட்சியாளர்கள் பொறுப்பேற்பார்களா? புத்தகப் பையுடன் தனியாக நடந்து செல்லும் குழந்தையைக் கொடூரன் தூக்கிச்செல்லும் கண்காணிப்புக் கருவி காட்சிகளைக் காணும்போது ஏற்படும் பதைபதைப்பும், ஆற்றாமையும், பெருங்கோபமும் வார்த்தைகளில் சொல்லக்கூடியதல்ல. கண்காணிப்புக் கருவி காட்சி இருந்தும், அக்கொடூரன் ஹிந்தியில் பேசியதை சிறுமி தெரிவித்த பிறகும் குற்றவாளியை இதுவரை பிடிக்க முடியாமல் தி.மு.க., அரசு திணறுவதுதான் நிகழ்ந்த வன்கொடுமையை விடவும் மிகப்பெரிய வன்கொடுமை!
திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடுதான், நாட்டில் நடைபெறும் அனைத்து சமூகக்குற்றங்களுக்கும் அடிப்படை காரணமாகும். வட மாநிலத்தவர்களின் வருகையை முறையாகப் பதிவு செய்யாத தி.மு.க., அரசின் அலட்சியம் அக்கொடுங்குற்றங்களை மேலும் பன்மடங்காக அதிகரிக்கச் செய்துள்ளது.
பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனை இதற்கு மேலும் தாமதிக்காமல் விரைந்து கைது செய்து, மிகக்கடுமையான தண்டனை தரவேண்டும். இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.
