9 காரட் தங்கத்துக்கு ஹால்மார்க் கட்டாயம்

புதுடில்லி:தங்கம் விலை உயர்வு காரணமாக தேவை குறைந்து வரும் நிலையில், ஒன்பது காரட் தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரையை இந்திய தர நிர்ணய அமைப்பு கட்டாயமாக்கி உள்ளது. இதனால், லேசான எடை கொண்ட தங்க நகைகள் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2016ம் ஆண்டின் இந்திய தர நிர்ணய சட்டத்தின் கீழ், தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை இடம்பெறுவது கட்டாயமாகும். இதன் வாயிலாக, நுகர்வோர் தங்க நகைகள் வாங்கும் முன்னர், அதன் துாய்மையை அறிந்து கொள்ளலாம்.

இதுவரை 14, 18, 20, 22 காரட் தங்க நகைகளுக்கு மட்டுமே ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக இருந்த நிலையில், தற்போது அப்பட்டியலில் 9 காரட் தங்கமும் சேர்க்கப்பட்டு உள்ளது.

குறைந்த காரட் கொண்ட தங்கம் வாங்கும் நுகர்வோரும், நம்பிக்கையுடன் வாங்குவதை ஊக்குவிப்பதே இதன் நோக்கம்.

இது தொடர்பாக இந்திய நவரத்தினம் மற்றும் நகைகள் கவுன்சில் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், 9 காரட் தங்க நகைகளுக்கு தற்போது அதிகாரப்பூர்வமாக ஹால்மார்க் கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. இதனை, அனைத்து நகை வியாபாரிகள் மற்றும் ஹால்மார்க் மையங்கள் பின்பற்ற வேண்டும் என தெரிவித்து உள்ளது.

 உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றம், வர்த்தக போர் காரணமாக விலை கிடுகிடு உயர்வு

 இந்தியாவில் கடந்த ஜூனில் தங்கம் விற்பனை 60 சதவீதம் சரிவு

 அதிக காரட் தங்க நகைகள் எட்டாக்கனி ஆனதால், 9 காரட் தங்கத்தின் மீது மக்கள் கவனம்

 குறைந்த காரட் நகைகளின் மதிப்பும் குறைவு என்பதால் திருட்டு, வழிப்பறி குறையக்கூடும்

 இதுவரை 40 கோடிக்கும் அதிகமான தங்க நகைகளுக்கு ஹால்மார்க் அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ளது

 தற்போது நாடு முழுதும் 361 மாவட்டங்களில், ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்பது அமலில் உள்ளது.

Advertisement