'டிக்' கடனுக்கு வட்டியை குறைக்க சிறு, குறு தொழில்கள் வலியுறுத்தல்

சென்னை:தமிழக தொழில் முதலீட்டு கழகமான, 'டிக்' தனது கடன்களுக்கான வட்டியை குறைப்பதுடன், வட்டி மானியத்தை மீண்டும் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு, தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, பல்வேறு பிரிவுகளின் கீழ் கடன்களை, 'டிக்' நிறுவனம் வழங்குகிறது.

கோரிக்கை



இந்த கடன்களுக்கு வட்டி அதிகமாக இருப்பதால், அதை குறைப்பதுடன்; வட்டி மானியமும் வழங்குமாறு அரசுக்கு, தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

இதுகுறித்து, தொழில்முனைவோர் கூறியதாவது:

'டிக்' கடன்களுக்கு முன்பு 6 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்பட்டது. அதன்படி, கடன் வாங்கியவர்கள் தவணையை ஒழுங்காக செலுத்தும் பட்சத்தில், ஆண்டின் முடிவில் மொத்தமாக செலுத்திய வட்டியில் 6 சதவீதமானது, கடனுக்கான அசல் தொகையில் வரவு வைக்கப்பட்டது.

இரு ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட அத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

டிக் வழங்கும் கடன்களுக்கு வட்டி, 11 சதவீதத்துக்கு மேல் உள்ளது. அதேசமயம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், 8 - 8.50 சதவீதம், தனியார் வங்கிகளில், 10 சதவீத வட்டியில் கடன் கிடைக்கிறது. எனவே, தமிழக அரசு நிறுவனமான டிக் வட்டியை குறைக்க வேண்டும்.

உதவி



கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் பிணையில்லாமல் கடன் பெறும் வசதி ஏற்படுத்த வேண்டும்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால், ஏற்கனவே மூலப்பொருட்கள் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள சிறு, குறுந்தொழில்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement