டி.ஆர்.எப்., பயங்கரவாதிகளே இல்லை: பாக்.,

இஸ்லாமாபாத்:பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட டி.ஆர்.எப்., எனப்படும், 'தி ரெசிஸ்டன்ட் ப்ரன்ட்' அமைப்பை, சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ள நிலையில், அந்த அமைப்பை ஏற்கனவே ஒழித்துவிட்டோம் என பாகிஸ்தான் கூறியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், கடந்த ஏப்ரல் 22ல் பயங்கரவாதிகள் ஊடுருவி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு, லஷ்கர் -- இ - தொய்பாவின் துணை அமைப்பான டி.ஆர்.எப்., பொறுப்பேற்றது. இவர்கள், பாகிஸ்தானில் இருந்து செயல்படுவதாக உளவு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த அமைப்பை, சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் அமெரிக்கா நேற்று முன்தினம் சேர்த்தது. இதனால் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததற்காக எப்.ஏ.டி.எப்., எனப்படும் சர்வதேச நிதி கண்காணிப்பு குழு பாகிஸ்தானை மீண்டும், 'கிரே' பட்டியலில் வைக்கும் என கூறப்படுகிறது.

இந்தப் பட்டியலில் இடம்பெறும் நாடுகளுக்கு, சர்வதேச அமைப்புகள் நிதியுதவி, கடன் வழங்காது. கடந்த, 2022ல் தான் பாகிஸ்தான் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில் டி.ஆர்.எப்., பயங்கரவாத அமைப்பு குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பாகிஸ்தானில் டி.ஆர்.எப்., பயங்கரவாத குழுவை முற்றிலுமாக ஒழித்துவிட்டோம். அதன் தலைவரை கைது செய்துள்ளோம். குழுவில் இருந்தவர்களை பயங்கரவாதத்திலிருந்து மீட்டு உள்ளோம்.

தற்போது செயல்பாட்டில் இல்லாத ஒரு அமைப்பின் மீது குற்றம் சுமத்துவது உண்மைக்கு தொடர்பில்லாதது. பாகிஸ்தான், அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் கண்டிக்கிறது. அதில் துளி அளவு கூட சமரசம் கிடையாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement