பிரம்மபுத்திராவில் அணை பணியை துவக்கியது சீனா

பீஜிங்:சீனா தன் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே, 14 லட்சம் கோடி ரூபாயில் உலகின் மிகப்பெரிய அணை கட்டும் பணியைஅதிகாரப்பூர்வமாக துவங்கியது.

நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில், பிரம்மபுத்திரா நதியில் பிரமாண்டமான அணையை சீனா கட்ட உள்ளது.

திபெத் கைலாய மலையில் உற்பத்தியாகும் பிரம்மபுத்திரா நதி, இந்தியாவின் அருணாச்சல், அசாம் வழியாக வங்கதேசத்திற்குள் நுழைந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

திபெத்தில் இந்த நதி யார்லுங்சாங்போ என, அழைக்கப்படுகிறது. திபெத் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனா, நீர்மின் திட்டத்திற்காக பிரம்மபுத்திராவில் உலகின் மிகப்பெரிய அணையை கட்ட திட்டமிட்டது.

நம் நாட்டு எல்லையிலிருந்து 50 கி.மீ., தொலைவில், திபெத்தில் உள்ள மெடோங் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா நதியின் மீது இந்த அணை அமைய உள்ளது. அதற்கான பணிகள் துவங்கியதாக சீன பிரதமர் லி குயாங் நேற்று அறிவித்தார்.

இந்த அணை திட்டத்தை இந்தியா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. 'இதை நீர் வெடிகுண்டாக சீனா பயன்படுத்தக் கூடும். இதனால் அருணாச்சலுக்கு பேரழிவு ஏற்படும்' என, அம்மாநில முதல்வர் பெமா காண்டு சமீபத்தில் தெரிவித்தார்.

Advertisement