தொழிலாளி கொலையில் 5 பேருக்கு ஆயுள்

தேனி:தேனி அருகே கோடாங்கிபட்டியில் மதுகுடித்து விட்டு தகராறு செய்தவர்களை தட்டி கேட்ட பாண்டியனை 58, அடித்து கொலை செய்த அதே பகுதியைச் சேர்ந்த சுகுமாறன் 19, கபில் 22, சேவாக் 19, அஜித்குமார் 19, சந்திரகுமார் 45, ஆகியோருக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.கோடாங்கிபட்டி அமராவதி பள்ளி தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாண்டியன். இவரது மனைவி செல்வி 55. இவர்கள் வீடு அருகே தேர் நிறுத்துமிடம் உள்ளது. தேர் அருகே அதே பகுதியை சேர்ந்த சுகுமாறன், கபில், சேவாக், அஜித்குமார், சந்திரகுமார் ஆகியோர் மது குடித்து விட்டு பிறருக்கு இடையூறு செய்தனர். இதனை பாண்டியன், செல்வி கண்டித்தனர்.
2022 ஜூலை 28 இரவில் பணிமுடிந்து பாண்டியன் வீடு திரும்பினார். தேர் அருகே நின்ற சுகுமாறன் உட்பட 5 பேரும் பாண்டியனுடன் தகராறு செய்து மரக்கட்டையால் தாக்கினர். அப்பகுதியினர் பாண்டியனை மீட்டு ஆம்புலன்சிற்கு தகவல் கூறினர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதித்த போது பாண்டியன் இறந்திருந்தார்.
இதுகுறித்து மனைவி செல்வி பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். சுகுமாறன் உட்பட 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் பாஸ்கரன் ஆஜரானார். சுகுமாறன் உட்பட ஐந்து பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், கட்ட தவறினால் 3 மாதம் கடுங்காவல் தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பளித்தார்.