வேளாண் ஆணையருக்கு எதிராக பெண் அதிகாரி அவமதிப்பு வழக்கு

சென்னை: நீதிமன்ற தடை உத்தரவை மீறி, ஒழுங்கு நடவடிக்கை விசாரணை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ஆணையர், துணை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துன்புறுத்தல்



தமிழக வேளாண் துறையில், காஞ்சிபுரம் வணிக பிரிவில் பணிபுரிந்து வரும் பெண் அதிகாரி, அங்குள்ள உதவி வேளாண் அதிகாரி தனசேகர், துணை இயக்குநர் முகமது ரபீக் ஆகியோருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் அடிப்படை யில், விசாரணை குழு அமைக்காததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் அதிகாரி வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக, அப்பெண் அதிகாரிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நடவடிக்கை



இந்நிலையில், 'என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை; பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடை சட்டத்தின் கீழ் அளித்த புகாரை திசை திருப்பும் வகையில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது' எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் அதிகாரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த மார்ச் 20ம் தேதி, பெண் அதிகாரிக்கு எதிரான நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த உத்தரவை மீறி, தன்னை காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு இடமாற்றம் செய்ததுடன், தனக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை தொடர்ந்து நடத்தி வருவதாக கூறி, அவமதிப்பு வழக்கை பெண் அதிகாரி தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், மனுவுக்கு, வேளாண் விற்பனை மற்றும் வணிக பிரிவு ஆணையர் ஆபிரகாம், துணை இயக்குநர் ஜீவராணி ஆகியோர் பதில்அளிக்க உத்தரவிட்டார். ஆக., 4ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

Advertisement