செய்தியாளர்களை தவிர்ப்பது ஏன்? விளக்கம் அளித்தார் வைகோ

காரைக்குடி : ''எனக்கு விரோதமான கருத்துகள் திணிக்கப்படுகின்றன. அதனால் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்க்கிறேன்,'' என ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.

காரைக்குடியில் வைகோ அளித்த பேட்டி:



கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று அபூர்வமாக பொய் சொன்னவர் பழனிசாமி. அரசியலில் நிலைக்க வேண்டும் என்பதற்காக கம்யூ., கட்சியை வசைபாடுகிறார்.


கம்யூ., கட்சியினர் கொள்கைக்காக ரத்தம் சிந்தியவர்கள். முதல்வராக இருந்த பழனிசாமி, இதுபோன்று பேசுவது அவருடைய நிலைக்கு அழகல்ல. ஜெயலலிதா குறித்தும், அ.தி.மு.க., குறித்தும் கம்யூ., கட்சியினர், பதிலடியாக பேசினால் நன்றாக இருக்காது.


எனது மகன், துரை தீவிர அரசியலுக்கு வருவதை முழுமையாக எதிர்த்தேன். ஆனால், கட்சி நிர்வாகிகள் ஓங்கிய குரலில், 'நீங்கள் என்ன சர்வாதிகாரியா?' என்று என்னை எதிர்த்து கேட்டனர்.



அதைதொடர்ந்து, ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு, 99 சதவீத ஆதரவுடன் அவர், கட்சியின் முதன்மை செயலராகத் தேர்வு செய்யப்பட்டார்.


இப்போது என்னை குற்றஞ்சாட்டும் நபர், அந்த நேரத்தில், 'எனக்கு ஒரு பார்லிமென்ட் தொகுதி வேண்டும்' என்று கேட்கவில்லை.


அப்போது கேட்டிருந்தால், அவருக்காகவும் முயற்சித்திருக்கலாம். ஆனால், அதை மறைத்து, தற்போது பொய்யாக குற்றச்சாட்டுக்களை வைக்கிறார்.


கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுடன் சேர்ந்து கொண்டு, ம.தி.மு.க.,வுக்கு கேடு செய்து வருகிறார். செய்தியாளர்கள் தொடர்ந்து எனக்கு விரோதமான கருத்துகளை திணிக்கின்றனர். அதனால் தான், எப்போதும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் நான், சமீப நாட்களாக தவிர்த்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement