ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் செயல்பாடு அமைச்சர் ஆய்வு

சென்னை : நம் நாளிதழ் செய்தியை தொடர்ந்து, ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் செயல்பாடு குறித்து, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு நடத்தினார்.

வேளாண் துறை வாயிலாக, 'ஊட்டச்சத்து வேளாண் இயக்கம்' என்ற புதிய திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு மூன்று வகை பழ மரச்செடிகள், ஐந்து வகை காய்கறி விதைகள், மூன்று வகை பருப்பு விதைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 4ல் துவக்கி வைத்தார்.

இதையடுத்து, தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் தலைமையில், ஆங்காங்கே பொதுமக்களுக்கு இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. ஆனால், சில நாட்களிலேயே பொருட்கள் வினியோகம் நிறுத்தப்பட்டது.

இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதை தொடர்ந்து, ஊட்டச்சத்து வேளாண் இயக்கம் திட்டம் குறித்து, நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் திடீர் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

இதில், துறையின் செயலர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். திட்டத்தை செயல்படுத்தும் தோட்டக்கலைத் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன், வேறு நிகழ்ச்சிக்கு சென்றதால் அவர் பங்கேற்வில்லை. திட்ட இடுபொருட்கள் வினியோகத்தை, இம்மாத இறுதிக்குள் முடிக்க, அதிகாரிகளுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement