ரூ.83,000 கோடி நஷ்ட ஈடு கேட்டு அமெரிக்க பத்திரிகை மீது டிரம்ப் வழக்கு

3

வாஷிங்டன்: பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தன்னை தொடர்புபடுத்தி, செய்தி வெளியிட்டதற்காக அமெரிக்காவின், 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகை மற்றும் அதன் உரிமையாளர் ரூபர்ட் முர்டாக் ஆகியோருக்கு எதிராக 83,000 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பெரிய முதலீட்டாளர் ஜெப்ரி எப்ஸ்டீன். இவருக்கு அந்நாட்டின் அரசியல்வாதிகள், நடிகர்கள், கோடீஸ்வரர்கள் என பல பிரபலங்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. அதிபர் டிரம்பும் 2005 காலகட்டத்தில் எப்ஸ்டீன் உடன் நட்பு பாராட்டினார்.

கடந்த 2006ல் எப்ஸ்டீன் மீது 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

நியூயார்க், புளோரிடா, விர்ஜின் தீவுகளில் உள்ள தன் சொகுசு பங்களாக்களில் சிறுமியரை கடத்தி வந்து அடைத்து வைத்து, அவர்களை பிரபலங்களுக்கு விருந்தாக்கினார்.

சிறுமியரை பாலியல் தொழிலுக்காக கடத்திய வழக்கில் 2019ல் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிறை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். அவரது மரணத்தில் இன்னமும் மர்மம் நீடிக்கிறது. சிலர் கொலையாக இருக்கலாம் என குற்றம்சாட்டுகின்றனர். அவரது வழக்கு ஆவணங்களை டிரம்ப் நிர்வாகம் வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால், அதை முழுமையாக வெளியிட டிரம்ப் மறுத்துவிட்டார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் டிரம்ப் இடையேயான நெருக்கமான தொடர்பு குறித்து, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை நேற்று முன்தினம் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதில் எப்ஸ்டீனின் 50வது பிறந்த நாளுக்கு டிரம்ப் கடிதம் ஒன்றை அனுப்பியதாகவும், அதில் நிர்வாண பெண்மணியின் படம் ஒன்றை வரைந்து, 'இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஒவ்வொரு நாளும் மற்றொரு ரகசியத்தை உணரட்டும்' என்று எழுதியதாக கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 'அது என்னுடைய வார்த்தைகள் இல்லை. நான் பேசும் விதமும் இல்லை. நான் படங்களையும் வரையமாட்டேன். இது தவறான, அவதுாறு பரப்பும் செய்தி' என கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக பத்திரிகை நிறுவனர், ஆசிரியர் மற்றும் இரு நிருபர்கள் மீது 83,000 கோடி ரூபாய் இழப்பீடு கோரி, மியாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

'இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம், அனைத்தையும் உறுதியான ஆதாரங்களுடன் தான் எழுதியுள்ளோம்' என வால் ஸ்டீரீட் ஜர்னல் பத்திரிகை கூறியுள்ளது.

Advertisement