விருதுநகர் கண்காட்சி சென்னைக்கு மாற்றம்; முதல்வர் தேதி கிடைக்காமல் தவிப்பு

சென்னை : விருதுநகரில் நடக்கவிருந்த வேளாண் கண்காட்சியை, சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், முதல்வரின் தேதி கிடைக்காததால், கண்காட்சி தேதியை முடிவு செய்ய முடியாமல், வேளாண் துறையினர் தவித்து வருகின்றனர்.

விவசாய உற்பத்தி பொருட்களை, மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தவும், நவீன வேளாண் இயந்திரங்களின் பயன்பாடுகள் குறித்து, விவசாயிகள் அறிந்து கொள்ளவும், வேளாண் துறை வாயிலாக, ஆங்காங்கே வேளாண் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இது விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்கள், ஏற்றுமதியாளர்கள், வேளாண் இயந்திர விற்பனையாளர்கள் மத்தியில், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த மாதம், ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், மூன்று நாட்கள் வேளாண் கண்காட்சி நடந்தது. அத்துடன் வேளாண் தொழில் மேம்பாடு தொடர்பாக, கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. கண்காட்சியில், 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதேபோல், தென் மாவட்டங்களில் கண்காட்சி நடத்த, வேளாண் வணிகப்பிரிவு வாயிலாக திட்டமிடப்பட்டு, விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் இறுதியில் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், விருதுநகரில் முதல்வரின் சுற்றுப்பயண திட்டம் இல்லாததால், அந்த முடிவு கைவிடப்பட்டது.

இதையடுத்து, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், வேளாண் கண்காட்சியை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதை துவக்கி வைக்க, முதல்வர் ஸ்டாலினிடம் தேதி கேட்கப்பட்டுள்ளது. அவர் இன்னும் தேதி வழங்காததால், கண்காட்சி தேதியை முடிவு செய்ய முடியாமல், வேளாண் துறையினர் தவித்து வருகின்றனர்.

@block_B@

சென்னையில் தேவையா?

வேளாண் சார்ந்த கண்காட்சிகளை, விவசாயம் அதிகம் நடக்கும் மாவட்டங்களில் நடத்தினால், அங்குள்ள விவசாயிகள் பயன்பெறுவர். ஆனால், விவசாயம் இல்லாத சென்னையை, வேளாண் வணிகப்பிரிவினர், வேளாண் கண்காட்சி நடத்த தேர்வு செய்துள்ளனர். இங்கு கண்காட்சி நடத்துவதால், யாருக்கும் எந்த பலனும் ஏற்படப்போவது இல்லை. கண்காட்சியில் பங்கேற்க, விவசாயிகள் பெரும் தொகை செலவிட்டு, சென்னை வர வேண்டும். கூட்டத்தை சேர்க்க, மாவட்டங்களில் இருந்து விவசாயிகளை அழைத்து வர வேண்டும். இதற்கு, மாவட்ட வேளாண் துறையினர்தான் அனைத்து செலவுகளையும் செய்தாக வேண்டும். எனவே, கண்காட்சியை சென்னையில் நடத்துவதற்கு பதிலாக, விருதுநகரிலேயே நடத்தலாம் என்பது, விவசாயிகளின் கருத்தாக உள்ளது.block_B

Advertisement