'விதி'யை மாற்றும் சாலை விதி உணர்த்திய மாணவர்கள்!

சாலை விபத்தால் உயிர், உடமைக்கு சேதாரம் ஏற்படாமல் இருக்க, 'எப்படியும் பயணிக்கலாம் என்பதல்ல... இப்படித்தான் பயணிக்க வேண்டும்' என்பதை கற்றுத்தருவது தான் சாலை விதி.

'சாலை விதிகளை மதிக்காமல், அதிவேகமாக வாகனங்களை இயக்குவது தான், விபத்து நடப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று' என்கின்றனர் போலீசார். 'அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்து நேரிடக்கூடாது' என்பதற்காக தான், சாலையின் இடையே ஆங்காங்கே 'பேரி கார்டு'கள் வைக்கப்பட்டு, வாகனங்களின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது.ஆனால், பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ், லாரி, சரக்கு வாகனங்களின் டிரைவர்கள் பலரும், 'பேரி கார்டு' வைக்கப்பட்டுள்ள இடத்தில் கூட சிறிதும் வேகத்தை குறைக்கமல் வாகனங்களை இயக்குகின்றனர். இதனால், விபத்து தவிர்க்க முடியாததாகி விடுகிறது.அதுவும், பள்ளி, கல்லுாரிகள் உள்ள சாலைகளில் வாகன ஓட்டிகள் மித வேக பயணத்தை மேற்கொள்வது தான், மாணவர்களுக்கும், பாதசாரிகளுக்கும் பாதுகாப்பு.

இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்கு உதவும் வகையிலும், திருப்பூர், காந்திநகர், பத்மாவதிபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பள்ளி வளாகத்தில் 'பேரி கார்டு' வைத்து, தாங்களே வாகன போக்குவரத்து கட்டுப்படுத்தி வருகின்றனர். இது, வரவேற்பு, விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

Advertisement