மிரட்டி மீன் பிடிக்கும் சீனா; குழம்பிய குட்டையா இந்தியப்பெருங்கடல்?

நம் அண்டை நாடான மாலத்தீவின் சுதந்திர தின விழாவில், முக்கிய விருந்தினராக கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக அந்நாட்டின் தலைநகர் மலே-விற்கு, ஜூலை 26-ம் தேதி செல்ல இருக்கிறார்.
அந்த நாட்டு அதிபர் முகமது மொய்சுவின் அழைப்பை ஏற்று அங்கு செல்லும் நம் பிரதமர், இரு நாட்டு அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் குறித்து பேச்சு நடத்த உள்ளார். தொடர்ந்து, இரண்டு நாடுகளும் பல்வேறு ஒததுழைப்பு உடன்படிக்கைகளில் கையெழுத்திட உள்ளன.
நம் நாட்டின் அண்டை நாடுகளான உறவு குறித்து பேசும் போதெல்லாம், அது இரு நாட்டு உறவுகளுடன் நின்று விடுவதில்லை. மாறாக, சர்வதேச உறவுகள் மற்றும் அரசியல் மாற்றங்களை ஒட்டியும் கூட அவை முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில், தெற்கே உள்ள மாலத்தீவு, இலங்கை போன்ற இந்திய பெருங்கடல் நாடுகளின் சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு குறித்த விஷயங்களில் நம் நாடு தனி கவனம் செலுத்துகிறது. அதிலும் குறிப்பாக, அண்மையில் பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான ஆப்பரேஷன் சிந்துாரைத் தொடர்ந்து, இந்திய பெருங்கடல் குறித்த நம் எண்ணவோட்டமும் பெருகி உள்ளது.
பிரம்ம பிரயத்தனம்
நம் நாட்டின் பெயரை தாங்கும் இந்திய பெருங்கடல், இந்தியாவின் கடல் அல்ல என்று சீனா தொடர்ந்து கூறி வருகிறது. அதே சமயம், கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் கடல் பகுதிகள் தனது என்று எந்த முகாந்திரமும் இல்லாமல் அந்த நாடு சொந்தம் கொண்டாடி வருகிறது. எது எப்படியோ, இந்திய பெருங்கடலில் நமக்கு முன்னுரிமை உள்ளது என்பதை தாண்டி, அது 'இந்தியாவின் குட்டை' என்று ஏற்றுக் கொள்ளப்படும் நாள் அதிக தொலைவில் இல்லை.
சர்வதேச அரங்கில், பனிப்போருக்கு பிந்தைய காலகட்டத்தில் அமெரிக்கா மட்டுமே உலக வல்லரசாக அறியப்பட்டது. அப்போது துவங்கி இப்போது வரையிலும், சீனாவும் அவ்வாறு தன்னை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரம்ம பிரயத்தனம் செய்து வருகிறது. அதனால் தான், அந்த இரண்டு நாடுகளுமே, எதிர்காலத்தில் வல்லரசாக மாறக்கூடிய வலிமை உள்ள நம் நாட்டை, தொடர்ந்து இரண்டாவது நிலையிலேயே வைத்து பார்க்க விரும்புகின்றன.
அமெரிக்காவிற்கு தற்போது நம் நட்பும், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இணைந்து செயலாற்றுவதும் அவசியமாக இருக்கிறது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையிலேயே அவர்களது நட்பு இருக்கிறது. அதைக் கண்டு நம் அரசு ஏமாந்து விடவில்லை. அதனால் தான், நட்பு நாடுகளாக இருந்தாலும், அவ்வப்போது உரசல்கள், மோதல்கள் ஏற்படுகின்றன.
இந்தியாவை ஒட்டிய கடல் பகுதியில், இலங்கை மற்றும் மாலத்தீவு போன்ற நட்பு நாடுகளை நமக்கு எதிராக துாண்டிவிட்டு, சீனா குளிர் காய நினைத்தது. பத்து ஆண்டுகளுக்கு முன், இலங்கை அம்மாந்தோட்டை என்று அறியப்படும் ஹம்பந்தோட்டா துறைமுக பகுதியை, 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. கூட்டு கடல் ஆராய்ச்சி என்ற பெயரில், இந்த இரண்டு நாடுகளுக்கும் சீனா தன் உளவு கப்பல்களை அனுப்பி வைத்ததும் இதன் காரணமாகத் தான்.
பிள்ளையார் கோயில் ஆண்டி
இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகிய இரண்டு கடற்பரப்பையும் மனதில் வைத்து சீனா காய் நகர்த்துகிறது. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், தங்களில் யார் பெரியவன் என்ற போட்டியில் இறங்கி உள்ள அமெரிக்காவும், சீனாவும் தாங்கள் பகிர்ந்து கொள்ளும் பசிபிக் கடல் பகுதியில் தங்களது வீர விளையாட்டுகளை வைத்துக் கொள்ளவில்லை. மாறாக, ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல், இருவருக்குமே சம்மந்தமில்லாத நமது கடல் தளத்தில் முஷ்டியை மடக்குகின்றன.
தற்போதைய நிலையில். இந்திய கடல் பிராந்தியத்தில், அமெரிக்காவை ஓரளவிற்காகவாவது அனுசரித்து செல்வது நமது சர்வதேச உத்தியின் ஒரு பகுதியே. சீனா, நமது நாட்டை குறி வைத்து இந்த பகுதியில் காய் நகர்த்தும் போது, மொரீஷியசுக்கு சொந்தமான சாகோஸ் தீவு பகுதியில் அமெரிக்காவின் டீகோ கார்சியா படைத்தளம் இருப்பது நமக்கு பாதுகாப்பாகவே இருக்கும்.
என்றாலும், அமெரிக்கா முன் வைத்த 'குவாட்' எனப்படும் நான்கு நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாம், அதனையே ஒரு ராணுவ கூட்டணியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. காரணம், ஒரு கட்டத்திற்கு பின்னர், நம்முடன் பேசாமலேயே, அமெரிக்கா நமது நாட்டை மூன்றாம் நாடுகளுடனான போரில் இழுத்து விடும். இவ்வாறு தான், குறிப்பாக ஈராக் நாட்டுடனான போர்களில், அமெரிக்கா தனது ஐரோப்பிய நண்பர்களை மாட்டி விட்டது.
அதே சமயம், இந்தியப் பெருங்கடலின் முகத்துவாரம் போன்ற தென் பகுதியில், நமக்கு ஆதரவான பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான ரீயூனியன் தீவு உள்ளது. அங்கு பிரான்ஸ் நாட்டின் படைத் தளமும் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக அந்த பகுதியில், நமது இரண்டு கடற்படைகளும் ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அதே சமயம், அடுத்த மூன்று, நான்கு தசாம்சங்களில் இந்த பகுதியில் சர்வதேச போட்டியில் பிரான்ஸ் நாடும் கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. அதுவே மற்றொரு ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கும் பொருந்தும். இரண்டுமே நமது நட்பு நாடுகள் என்றாலும், நமது கடல் பகுதி அடுத்த பனிப்போரின் தளமாக இருக்கும் என்ற கவலையும் உள்ளது.
குறி வைத்து காய் நகர்த்தல்
இது தவிர, நமது நாடு, அந்த பகுதியில் உள்ள மொரீஷியஸ் தீவில், இரு நாட்டு பயன்பாட்டிற்காக விமான தளம் ஒன்று அமைத்து வருகிறது. அடுத்துள்ள செஷல்ஸ் நாட்டில் அவ்வாறான ஒரு தளத்தை அமைக்க நாம் செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அதனால் ஒன்றும் குடி முழுகி போகவில்லை. என்றாலும் இந்த பகுதியில் உள்ள மடகாஸ்கர் என்ற ஆப்ரிக்க தீவு நாட்டை நட்பு நாடாக மாற்ற நமது அரசு முன்னெடுப்புகளை செய்து வருகிறது.
தொடர்ந்து, இந்தியப் பெருங்கடலின் இந்த முகத்துவாரத்தை நோக்கி நீண்டிருக்கும் அந்தமான் மற்றும் லட்சதீவு பகுதிகளில் நமது ராணுவ நிலைகளை நாம் மேன்மேலும் வலுப்படுத்தி வருகிறோம். குறிப்பாக நீண்ட தூர தாக்குதல்களுக்காக நமது விமானப்படை இந்த தளங்களில் நிலை கொண்டுள்ளது.
இடையே, நமது அண்டை நாடுகளான இலங்கை, மாலத்தீவு, மொரீஷியஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய 'கொழும்பு பாதுகாப்பு அமைப்பு' என்ற ஒரு கூட்டணியையும் உருவாக்கி வருகிறோம். தற்போது மரபுசார பாதுகாப்பு விஷயங்களை மட்டுமே உள்ளடக்கியுள்ள இந்த அமைப்பு, படிப்படியாக அடுத்த கட்டங்களுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கலாம்.
அந்த வகையில், முகத்துவாரம் துவங்கி, அந்தமான், லட்சத்தீவு, மொரீஷியஸ், ரீயூனியன், டீகோ கார்சியா, மற்றும் கொழும்பு பாதுகாப்பு அமைப்பு என்று ஒரு வளையத்தினுள் இந்திய பெருங்கடலை இந்தியாவின் குட்டையாகவே நாம் மாற்றிவிட்டோம் என்பதே உண்மை. இங்கே குட்டையை குழப்பி மீன் பிடிக்க சீனா போன்ற நாடுகள் முயற்சி செய்யுமேயானால், அது வினையாகவே முடியும்
என். சத்தியமூர்த்தி
சர்வதேச அரசியல் ஆய்வாளர்.

மேலும்
-
என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்; தேசமே முதன்மையானது என்கிறார் காங்., எம்.பி., சசி தரூர்
-
அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!
-
மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்
-
அட்லாண்டா சென்ற விமானம் தீப்பற்றி எரிந்தது; லாஸ் ஏஞ்சல்சில் அவசர தரையிறக்கம்
-
பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை; போட்டுப் பழகிய பை!
-
அரசு பஸ்சில் கும்மிருட்டு பயணியர் படு அவஸ்தை