வங்கி மேலாளருக்கு விதித்த சிறை தண்டனை ரத்து; கடன் மோசடி வழக்கில் தீர்ப்பு

சென்னை : ஒரு கோடி, 42 லட்சத்து, 73,000 ரூபாய் கடன் மோசடி செய்த வழக்கில், இந்தியன் வங்கி தலைமை மேலாளருக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை, மயிலாப்பூர் இந்தியன் வங்கி கிளையில், கடந்த 1991 -- 98ம் ஆண்டுகளில், போலி ஆவணங்களை சமர்ப்பித்து, பல தவணைகளாக கடன் பெற்றதன் வாயிலாக, வங்கிக்கு 1 கோடி, 42 லட்சத்து, 73,000 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த, 'விஷ்ணுவர்தன் கிரானைட்ஸ்' நிறுவனத்தின் மீதும், அதன் பங்குதாரர் ராமகிருஷ்ண பிரசாத், வங்கி தலைமை மேலாளர் சுப்புராமன் ஆகியோர் மீதும், சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், ராமகிருஷ்ண பிரசாத்துக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 கோடி, 55 லட்சம் ரூபாய் அபராதமும், வங்கி மேலாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து, கடந்த 2012, அக்., 12ல் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, ராமகிருஷ்ண பிரசாத், சுப்புராமன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு:

ராமகிருஷ்ண பிரசாத்துக்கு, குற்றச்சதி, ஊழல் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் விதிக்கப்பட்ட ஏழு ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யப்படுகிறது. மற்ற பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது.

மேலும், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் விதித்த, 1 கோடி, 55 லட்சம் ரூபாய் அபராதமும் உறுதி செய்யப்படுகிறது. அந்த தொகையை, இந்தியன் வங்கி மயிலாப்பூர் கிளைக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்.

அதேபோல், வங்கியின் தலைமை மேலாளர், கடன் கொடுப்பதற்கு சில அச்சங்களை தெரிவித்துள்ளார். ஆனால், மண்டல அலுவலகத்தின் வாய்மொழி ஒப்புதல் காரணமாகவே, நிறுவனத்துக்கு கடன் அளித்தது நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement