டாக்டரை கேளுங்கள் பகுதிக்காக

வெள்ளெழுத்து என்றால் என்ன

- -தனஞ்ஜெயன், மதுரை

வயதாகும் போது அருகிலுள்ள பொருளை அவ்வளவாக பார்க்க முடியாது, எழுத்துக்களை வாசிக்க முடியாததை வெள்ளெழுத்து என்கிறோம். நமது பார்வையை 'போக்கஸ்' செய்ய முடியாத நிலை இது. இதனை 'பிரசவோபியா' என்கிறோம். இந்த பிரச்னையுள்ளவர்கள் சற்று தள்ளி வைத்து படிப்பதை பார்க்கலாம். வயதாகும் போது கண் நரம்புகளில் ஏற்படும் தளர்ச்சி, கண்ணின் நெகிழ்வுத்தன்மை குறைவது போன்றவை இதற்கு காரணம். இதனை சில கண் பயிற்சிகள் மூலம் சரிசெய்ய வேண்டும். கண்ணை அடிக்கடி இமைக்க வேண்டும். துாரத்திலும், அருகிலும் அடிக்கடி பார்க்க வேண்டும். கண்ணில் ஈரத்தன்மை இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் தயாரித்த சுத்தமான நெய், ஆமணக்கு எண்ணெய் போன்றவற்றை கண்ணிற்கு வெளியே தேய்க்கலாம். திரிபலா மருந்து சாப்பிடலாம். முருங்கை இலையை காயவைத்து கல் உப்பு சேர்த்து பொடித்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுவது நல்லது. இவையெல்லாம் வெள்ளெழுத்து ஏற்படுவதைக் குறைக்கும்.

- டாக்டர் என்.நாராயணன் நம்பூதிரிகண் மருத்துவ நிபுணர்ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனைகூத்தாட்டுக்குளம், கேரளா

குதிகால் வலி எதனால் ஏற்படுகிறது, அதை தீர்க்க என்ன வழி.

-- கே.ஜெகநாதன், பாறைப்பட்டி

குதிகால் வலி ஏற்பட உடல் எடை அதிகரித்தல் முக்கிய காரணம். பாத சவ்வு அலர்ஜி, பாத கொழுப்பு சத்து அலர்ஜி, பாத நரம்பு பாதிப்பு, முடக்குவாதம், எலும்பு பாதிப்பு ஆகியவைகளால் ஏற்படுகிறது. உடல் எடையை சீராக வைத்தாலே பாத சதைகளை வலுப்படுத்தும்; நடக்கும் போது வலி ஏற்பட வாய்ப்பு இல்லை.

---- டாக்டர் எஸ்.லோகநாதன்அரசு தலைமை மருத்துவர்வேடசந்துார்

எனக்கு 55 வயது ஆகிறது. கடந்த சில நாட்களாக வயிறு உப்பிய நிலையில் காணப்படுகிறது. சரியாக உணவு சாப்பிட முடியவில்லை. வயிறு அடிக்கடி வீங்குவது போல் இருக்கிறது. இதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்.

- வேலவன், தேனி

வயிறு அடிக்கடி உப்புவது போல் தெரிவது பல்வேறு காரணங்களாக இருக்கலாம். கோலிசிஸ்டேல் என்ற கல்லீரலில் பித்தநீர் சுரப்பு பிரச்னை, குடல் ஏறுதல் பிரச்னை, அல்சர் பிரச்னை ஆக இருக்கலாம். ஒருவேளை புற்றுநோய் ஆரம்ப அறிகுறியாக கூட இருக்கலாம். உணவுப்பழக்க வழக்கத்தை சீர்படுத்தி கொள்ள வேண்டும். உடனடியாக மருத்துவரை அணுகி ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனில் எந்த காரணத்தால் வயிறு வீங்குதல் பிரச்னை ஏற்படுகிறது என்பதை உறுதி செய்திட வேண்டும். டாக்டர் பரிந்துரை செய்யும் மருந்துகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

- டாக்டர் அஸ்வதாமன்நகர் நல சுகாதார நிலையம் அல்லிநகரம், தேனி

எனக்கு சர்க்கரை பாதிப்பு உள்ளது. பாதங்கள் மதமதப்பாக கால் அதிகமாக வலிக்கிறது.இதற்கான தீர்வு என்ன.

- வி.நர்மதா, ராமநாதபுரம்

சர்க்கரை நோயாளிகளின் பாதங்களில் உணர்வு இல்லாமல் இருத்தல், இரவு நேரங்களில் அதிகமாக கால்வலி இருந்தால் டாக்டரை சந்திப்பது நல்லது. கால்களில் சிறு புண்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு அதிகமாக இருக்கும். சில நேரங்களில் கால் விரல்களை அகற்றும் நிலை ஏற்படும்.

கால்களில் ரத்த ஓட்டம் குறித்து ஸ்கேன் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஆரம்ப நிலையில் மருத்துவமனைக்கு வந்தால் மருந்து, மாத்திரைகள் மூலம் சரி செய்ய முடியும். பாதிப்பு முற்றிய பின் வந்தால் கால்களை இழக்க நேரிடும்.சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். தினமும் இரவு துாங்க போகும் போது கால்களை சுத்தம் செய்து கண்ணாடி மூலம் ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கார்போ ைஹட்ரேட் சத்துக்களை குறைத்து புரதச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சிறு தானியங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

- டாக்டர் எம்.முல்லைவேந்தன் அறுவை சிகிச்சை நிபுணர்அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்

பித்தப்பை கல்லை எப்படி சரி செய்வது

- க.ராஜா, சிவகங்கை

பித்தப்பை கற்கள் என்பது ரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் பிற ரசாயனங்களின் சமநிலையின்மையினால் உருவாகும் கடினமான துகள். ரத்த குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு வரும். கல் உருவானால் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் இருக்காது. கல் பெரிதாக பெரிதாக வயிற்றின் மேல் வலது பக்கத்தில் வலி இருக்கும்.

உணவு உட்கொண்ட உடன் வலி ஏற்படலாம். மஞ்சள் காமாலை, அஜீரணம் இவற்றின் அறிகுறி. குறைந்த கொழுப்பு உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். சரியான உடல் பருமனை பராமரிக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். பித்தப்பை கற்களை எம்.ஆர்.ஐ., ஸ்கேன், சிடி ஸ்கேன் மூலம் அறியலாம். பித்தப்பை கற்களை லேப்ரோஸ்கோபிக் சிகிச்சை மூலம் எளிதில் அகற்ற முடியும்.

- டாக்டர். ராகவேந்திரன்பொது அறுவை சிகிச்சை நிபுணர்உதவி பேராசிரியர்அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சிவகங்கை

எனது 3 வயது மகனுக்கு பற்களில் சொத்தை உள்ளது. பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் என்ன.

-- மு.துர்கா, மல்லாங்கிணர்

குழந்தைகள் சாக்லேட் சாப்பிடுவதால் மட்டும் பற்களில் சொத்தை ஏற்படுவதில்லை. பால் பாட்டில்களை இரவில் துாங்கும் போது வாயில் வைத்தபடி துாங்குவதாலும் சொத்தை ஏற்படும். இந்த பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வெள்ளை நிற காட்டன் துணியால் குழந்தையின் பற்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். 4 வயதிற்கு பின் ப்ளூரைடு பேஸ்ட் கொண்டு குழந்தைகளை காலை, இரவு பற்களை சுத்தம் செய்ய வைக்க வேண்டும்.

சொத்தை பாதித்த பற்களை அகற்றுவதை தவிர்த்து, பல் மருத்துவரை அணுகி ப்ளூரைடு வார்னிஷ் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். இதனால் பாதிப்பு மற்ற பற்களுக்கு பரவுவதை தடுக்க முடியும். 6 வயது முதல் 12 வயது வரை பால் பற்கள், மற்ற பற்கள் விழுந்து முளைக்கும்.

-- டாக்டர் பாலமுருகன்

பல் அறுவை சிகிச்சை நிபுணர்

காரியாபட்டி

Advertisement