ஹிந்துக்களின் கோரிக்கைகளை ஏற்பவர்களுக்கு மட்டுமே ஓட்டு: ஹிந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் பேட்டி

திருப்பரங்குன்றம்: ஹிந்துக்களின் கோரிக்கைகளை ஏற்பவர்களுக்கு மட்டுமே ஓட்டளிப்போம்; அந்த கருத்தை வலியுறுத்தி திருத்தணியில் இன்று பிரசார பயணம் துவங்குகிறது என ஹிந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றத்தில் அவர் கூறியதாவது:

ஹிந்து மக்கள் கட்சி சார்பில் இன்று, திருத்தணி மலையில் இருந்து 'வெல்லும் தமிழகம்' என்ற தலைப்பில் ஹிந்துக்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்பவர்களுக்கு மட்டுமே ஓட்டளிக்க வேண்டும் என பிரசார பயணம் மேற்கொள்கிறோம்.

ஹிந்துக்கள் 100 சதவீதம் ஓட்டளிப்பது இல்லை. இதனால் அரசியல்வாதிகள் ஹிந்துக்களை கிள்ளு கீரைகளாக நினைக்கின்றனர். ஹிந்துக்களின் கோரிக்கைகளை செவிமடுப்பதற்கு யாரும் இல்லை. ஹிந்து எனக் கூறினாலே மதவாதம் என்கின்றனர்.

மதுரையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம், அனைத்து சமுதாய நல்லிணக்க கூட்டமைப்பினர் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை எனக் குறிப்பிட்டு முழுக்க முழுக்க மத அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். ஹிந்துக்களின் நியாயமான கோரிக்கைகளைக்கூட ஏற்றுக் கொள்வதற்கு கட்சிகள் தயாராக இல்லை.

எனவே ஹிந்துக்களை வாக்கு வங்கியாக அணி திரட்டுவதற்காக பிரசார பயணத்தை துவக்குகிறோம்.

நாம் தமிழர் கட்சி ஆடு மாடுகளுக்காக மாநாடு நடத்தியதை வரவேற்கிறோம். ஆடு மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் ஹிந்து மதம். தமிழகத்தில் பசுவதை தடைச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. மாடுகளை பாதுகாப்பது தமிழர்களுடைய பண்பாடு.

ஆனால் மாடுகளுக்கு மாநாடு போட்டு பசுவதை தடை சட்டம் பற்றி பேசாமல் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார் சீமான். முஸ்லிம் கைதிகளுக்கு விடுதலை வேண்டும் என்கிறார். சீமான் இரட்டை வேடம் போடுகிறார் என்றார்.

அனுஷத்தின் அனுகிரஹம் நிறுவனர் நெல்லை பாலு, ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன் உடன் இருந்தனர்.

Advertisement