பத்தாண்டுகளாக நடத்தப்படாத 'இந்தியன் லேபர் கான்பரன்ஸ்' தொழிற்சங்கங்கள் கோரிக்கை

மதுரை: தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் செயல்பட்டு வந்த 'இந்தியன் லேபர் கான்பரன்ஸ்' பத்தாண்டுகளாக நடத்தப்படாததால் தொழிலாளர்களின் சிரமங்களை எடுத்துச் சொல்ல முடியவில்லை என மத்திய தொழிற் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் ஆண்டுதோறும் இந்திய தொழிலாளர்களுக்கான மாநாடு நடத்தப்படும். அதில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பங்கேற்பார். கடைசியாக 2014 ல் மாநாடு நடந்தது. அதன்பின் தற்போது வரை மாநாடு நடத்தாததால் எங்களது பிரச்னைகளை மத்திய அரசிடம் எடுத்துச் சொல்ல முடியவில்லை என்கின்றனர் மத்திய, மாநில அரசு தொழிலாளர்களுக்கான அனைத்து மத்திய தொழிற்சங்க பிரதிநிதிகள். அவர்கள் கூறியதாவது:

தொழிலாளர்கள் தரப்பில் உள்ள சிரமங்களை மத்திய தொழிற்சங்க பிரதிநிதிகள் மத்திய அமைச்சரிடம் எடுத்துச் சொல்லும் போது தீர்வுகள் உடனடியாக கிடைக்கும். தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் பிரச்னைகளை தீர்க்கும் பாலமாக மாநாடு இருந்தது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் தொழிலாளர்களுக்கு எதிராகவும் மத்திய அரசு செயல்படுவதால் இந்த மாநாட்டை நடத்தாமல் புறக்கணிக்கிறது. எங்களது பிரச்னைகள் நீண்டகாலமாக தீர்க்கப்படாததால் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து மாநாடு நடத்த வேண்டுமென கோரிக்கை மனு கொடுத்துள்ளோம்.

மத்திய, மாநில அரசு தொழிலாளர்கள், தனியார் தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் இந்திய தொழிலாளர் நலச்சட்டம்.

இதிலிருந்த 44 சட்டங்களை 29 ஆக குறைத்து கடைசியில் நான்கு சட்டமாக்கி 2020 ல் பார்லிமென்டில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதை தொழிலாளர் சட்டம் என்று சொல்லாமல் 'லேபர் கோடு' என மாற்றி விட்டது மத்திய அரசு.

இதை நடைமுறைப்படுத்தினால் தொழிலாளர்களுக்கான நலன்களே கிடைக்காது. தொழிற்சங்கங்களை கூட நடத்த முடியாத நிலை ஏற்படும்.

இதையெல்லாம் சரிசெய்வதற்கு முன்னோடியாக இந்திய தொழிலாளர் மாநாட்டை மத்திய அரசு நடத்த முன்வர வேண்டும் என்றனர்.

Advertisement