சாலையில் குப்பை கொட்டுவது யார்? கேமரா பொருத்தி கண்டறிய உத்தரவு

கோவை : கோவையில், பொது இடங்கள் மற்றும் ரோட்டோரங்களில் குப்பை கொட்டுவதை கண்காணிக்க, 'சிசி டிவி' கேமராக்கள் பொருத்த, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மேற்கு மண்டலம், 44வது வார்டு சாயிபாபா காலனி, என்.எஸ்.ஆர்., ரோடு, சிந்தாமணி நகர் பகுதியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களின் வருகை பதிவேடு மற்றும் துாய்மை பணியாளர்களின் செயல்பாடுகளை மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு செய்தார்.

குப்பையை தரம் பிரித்து வாங்குகிறார்களா என பார்வையிட்ட அவர், அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்கள், சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளை 'சிசி டிவி' கேமரா பொருத்தி கண்காணிக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சுகாதாரப் பிரிவினருக்கு அறிவுறுத்தினார்.

இந்த வார்டில் சாலைகள் பழுதடைந்திருக்கும் பகுதிகளை பார்வையிட்ட கமிஷனர், அவற்றை உடனடியாக சீரமைக்க, பொறியியல் பிரிவினருக்கு அறிவுறுத்தினார்.

அப்போது, மேற்கு மண்டல உதவி கமிஷனர் துரைமுருகன், உதவி நிர்வாக பொறியாளர் சவிதா, உதவி நகரமைப்பு அலுவலர் மகேந்திரன், கவுன்சிலர் காயத்ரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement