அட்லாண்டா சென்ற விமானம் தீப்பற்றி எரிந்தது; லாஸ் ஏஞ்சல்சில் அவசர தரையிறக்கம்

4

வாஷிங்டன்: அட்லாண்டா சென்ற டெல்டா விமானத்தில் தீப்பற்றி எரிந்ததால், லாஸ் ஏஞ்சல்சில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து அட்லாண்டாவிற்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 767-400 விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் டேக் ஆப் ஆன சில நிமிடங்களில் விமானத்தின் இன்ஜின் பகுதியில் தீ பற்றியது. விமானத்தின் இடது பக்க என்ஜினில் பற்றிய தீ நேரம் செல்ல செல்ல அதிகரித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



இதையடுத்து, லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திற்கு விமானி தகவல் கொடுத்தார். விமானத்தை லாஸ் ஏஞ்சல்சில் விமானி பத்திரமாக தரையிறக்கினார். தரையிறங்கியதும், அவசரகால குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த விமானம் இரண்டு ஜெனரல் எலக்ட்ரிக் இன்ஜின்களால் இயக்கப்படுகிறது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் இடது இன்ஜின் பழுதடையத் தொடங்கியது. இதனால் பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியது.


கடந்த ஏப்ரல் மாதம், ஒர்லண்டோ சர்வதேச விமான நிலையத்தில், டெல்டா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது இன்ஜின் பகுதியில் தீ பிடித்தது. அந்த விமானத்தில் 282 பயணிகள், 10 விமான பணியாளர்கள், இரண்டு விமானிகள் இருந்தனர். யாருக்கும் எந்த காயமும் ஏற்படாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement