பிரம்மபுத்திரா நதியில் மெகா அணை கட்டும் வேலையை தொடங்கியது சீனா!

3


பீஜிங்: பிரம்மபுத்திரா நதியில் மெகா அணை கட்டும் வேலையை சீனா தொடங்கி உள்ளது. இந்த அணையால், இந்தியா, வங்கதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில், யார்லாங் சாங்போ நதியில், பிரமாண்டமான அணையைக் கட்ட சீனா திட்டமிட்டது. அருணாச்சலப் பிரதேசத்துக்கு அருகே அமைந்துள்ள இந்த நதி இந்தியாவில் பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகிறது.

நான்கு ஆண்டுகளாக இழுபறியில் இருந்த திட்டத்தை தற்போது செயல்படுத்த அந்த நாடு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அணை கட்டும் திட்டத்தின் தொடக்க விழாவில், பிரதமர் லி கியாங் கலந்து கொண்டார். இந்த அணையால், இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.


பொருளாதார ரீதியாவும், ராஜதந்திர ரீதியாகவும் திபெத்தை இணைக்கும் இந்த திட்டத்திற்கு சீன அரசு கடந்த டிசம்பரில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அணை திட்டம் குறித்து இந்தியா சீனாவிடம் கடந்த ஜனவரியில் அதிருப்தி தெரிவித்து இருந்தது.

இந்தத் திட்டத்தில் ஐந்து நீர்மின் நிலையங்கள் கட்டப்படும், மொத்த முதலீடு 1.2 டிரில்லியன் யுவான் (167.1 பில்லியன் டாலர்) என மதிப்பிடப்பட்டு உள்ளது.


பிரம்மபுத்திராவில் அணை கட்டும் பணி தொடங்கியதும், இந்தியாவுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய சீனாவிடம் மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

Advertisement