15 மாத கால தாமதம்; ஜூலை 22ம் தேதி இந்திய ராணுவத்திடம் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஒப்படைப்பு

புதுடில்லி: அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, முதற்கட்டமாக, வரும் ஜூலை 22ம் தேதி இந்திய ராணுவத்திடம் 3 அப்பாச்சி ரக ஹெலிகப்டர்கள் ஒப்படைக்கப்படுகிறது. இது 15 மாத கால தாமதமாகும்.


அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்ட அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை அமெரிக்கா தயாரித்து வருகிறது. 2015ம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவுடனான ரூ.13,952 கோடி ஒப்பந்தத்தின் கீழ் இந்திய விமானப்படையில் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும், ராணுவத்தில் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் பயன்பாட்டில் உள்ளன.


ஏற்கனவே இந்த ரக ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக மேலும் 6 ஹெலிகாப்டர்களை வாங்க, கடந்த 2020ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ரூ.5,171 கோடியில் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த 2024ம் ஆண்டு மே அல்லது ஜூன் மாதம் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் என்று என எதிர்பார்க்கப்பட்டது.


விநியோகத்தில் எழுந்த சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்டபடி ஹெலிகாப்டர்களை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், முதற்கட்டமாக, 3 அப்பாச்சி ரக போர் ஹெலிகாப்டர்கள் ஜூலை 22ம் தேதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அப்பாச்சி ஹெலிகாப்டர்களின் வருகையின் மூலம் இந்திய ராணுவத்தின் திறன் வலிமை பெறும் என்று நம்பப்படுகிறது.

Advertisement