இ.பி.எஸ்., பேச்சில் உள்நோக்கமா; நயினார் நாகேந்திரன் பதில்

13

சென்னை: ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல என்று இ.பி.எஸ்., பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.



டெல்டா மாவட்டங்களில் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., திருத்துறைப்பூண்டியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், 'ஆட்சியில் பா.ஜ.,க்கு பங்கு கொடுப்பாரா இ.பி.எஸ்.,' என்று எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர். நாங்கள் ஏமாளி இல்லை.


அ.தி.மு.க., அதிக இடங்களில் தேர்தலில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று பேசினார். இ.பி.எஸ்.,சின் இந்த பேச்சு அரசியல் ரீதியாக பல்வேறு விமர்சனங்களையும், பார்வைகளையும் முன் வைத்தது.


இந்நிலையில், இ.பி.எஸ்., பேச்சுக்கு பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் கூறி உள்ளார். நிருபர்களிடம் அவர் பேசுகையில் கூறியதாவது;


அவர் சொன்னது அந்த நோக்கம் அல்ல.நீங்கள் (நிருபர்கள்) இதை கேட்பீர்கள் என்று தெரியும். 'அ.தி.மு.க.,வை பா.ஜ., கபளீகரம் செய்துவிடும் , தமிழகத்தை அடகு வைத்துவிடுவார்கள்' என்று தி.மு.க.,வினர் பேசினதற்கு அவர் பதில் (ஏமாளி அல்ல என்று இ.பி.எஸ்., பேசிய கருத்து) கூறியிருக்கும் பதில் தான் அது.


இதில் வேறு உள்நோக்கமும், உள் அர்த்தமும் இல்லை. நான் இ.பி.எஸ்.,சிடம் தொலைபேசியில் பேசிவிட்டேன். உள்நோக்கமும், எந்த அர்த்தமும் கிடையாது. எங்களின் தேசிய ஜனநாயக ஆட்சி அமையும்.


இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.


அவர் மேலும் கூறியதாவது;


கூட்டணி விவகாரத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷா, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி ஆகியோர் அனைத்து விஷயங்களையும் பேசி முடிவு எடுப்பார்கள். இதில், எவ்வித குழப்பமும் இல்லை. கூட்டணியும் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் எதையும் நிறைவேற்றவில்லை. ஆசிரியர்கள் போராடி வருவது வருத்தத்தை அளிக்கிறது.


ஆசிரியர்கள் பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ளது. இது போன்ற காரணத்தால், ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்வியும் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் 97 ஆயிரம் மாணவர்கள் பயின்றார்கள்.


இந்த ஆட்சிக் காலத்தில் 65 ஆயிரம் ஆதிதிராவிடர் மாணவர்கள் மட்டும் பயில்கின்றனர். ஆசிரியர்கள், பள்ளிக்கூடங்கள் உட்பட அனைத்திலும் பின்னோக்கி செல்கிறது. இதே போல் இந்த ஆட்சி 2026 தேர்தலிலும் பின்னோக்கி சென்று விடும்.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement