ஆபரேஷன் சிந்தூர் பற்றி பார்லி.யில் மத்திய அரசு பேச தயார்: அமைச்சர் கிரண் ரிஜிஜூ

புதுடில்லி: ஆபரேஷன் சிந்தூர் பற்றி பார்லி.யில் மத்திய அரசு பேச தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி உள்ளார்.
பார்லி.மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை 21) தொடங்கி ஆக.21 வரை நடக்கிறது. சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக ஆக.13 மற்றும் ஆக.14 ஆகிய தேதிகளில் மட்டும் கூட்டம் நடைபெறாது.
கூட்டத்தொடரை எப்படி சுமூகமாக நடத்துவது என்பது குறித்து டில்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமை ஏற்றார். கூட்டம் முடிந்து வந்த அவர் நிருபர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது;
இன்றைய கூட்டத்தில் 51 கட்சிகளில் இருந்து 40 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். கூட்டத்தொடர் சுமூகமாக நடக்க வேண்டும் என்று அவர்களை கேட்டுக் கொண்டோம். இந்த பொறுப்பு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது.
வெளிநாட்டு பயணங்களை தவிர மற்ற தருணங்களில், பிரதமர் அவையில் எப்போதும் இருப்பார். ஒவ்வொரு பிரச்னையிலும் பிரதமரை தொடர்ந்து இழுப்பது பொருத்தமில்லாத ஒன்று. சம்பந்தப்பட்ட துறை பற்றி விவாதிக்கப்படும் போது அங்கு அந்த துறையின் அமைச்சர் பதிலளிப்பர் என்றார்.
அப்போது ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பினால் மத்திய அரசு பதில் அளிக்குமா? என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு;
பஹல்காம் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் உட்பட அனைத்து முக்கியமான பிரச்னைகளையும் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் அது பார்லிமென்ட் விதிகளின்படி இருக்க வேண்டும்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அனைத்து பரிந்துரைகளையும் நாங்கள் கேட்டுள்ளோம். அனைத்துக் கேள்விகளுக்கும் மத்திய அரசு பதிலளிக்கும். பார்லி. உள்ளே தான் பதில் அளிப்போமே, தவிர வெளியே இல்லை என்றார்.
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் போன்ற நடவடிக்கைகளுக்கு பின்னர் நடக்கும் முதல் கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும்
-
பெனால்டி இல்லாமல் அதிக கோல்கள்: மெஸ்ஸி புதிய சாதனை
-
லண்டன் இஸ்கான் உணவகத்தில் அசைவ உணவை சாப்பிட்ட நபர்; அதிர்ச்சி சம்பவம்
-
உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்; ஆனால்...: புடின் சொல்ல வருவது என்ன?
-
அதெல்லாம் ராணுவ ரகசியம்: சீமான் பேட்டி
-
அவதுாறு பரப்பும் அமைச்சர் நேரு; இ.பி.எஸ்., பதிலடி
-
200 ஆண்டுகள் பழமையான அரசுப் பள்ளி கட்டட மேற்கூரை இடிந்து விபத்து!