பருவநிலை மாற்றத்தால் குழந்தைகளின் கல்வி பாதிப்பு: ஐ.நா., அறிக்கை

நியூயார்க்: உலகளவில் பருவநிலை மாற்றம் காரணமாக கல்வியில் நேரடி தாக்கம் ஏற்படுவதுடன் 1.5 ஆண்டு பள்ளி நாட்களை குழந்தைகள் இழக்கின்றனர் என ஐக்கிய நாடுகள் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக யுனெஸ்கோவின் சர்வதேச கல்வி கண்காணிப்பு குழுவினர், கனடாவின் சஸ்கச்செவன் பல்கலை இணைந்து பருவநிலை மாற்றம் தொடர்பாக நடத்திய ஆய்வு அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த 20 ஆண்டுகளில் பருவநிலை தொடர்பான நிகழ்வுகள் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் 50 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர்.
வெப்பம் காரணமாக குழந்தைகளின் கல்வியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.


1969 முதல் 2012 வரையில் 29 நாடுகளில் பருவநிலை தொடர்பான தகவல்களை ஆய்வு செய்ததில் சராசரியை விட அதிகளவு வெப்பம் ஏற்பட்டதால், பள்ளி நாட்கள் குறைந்தது தெரியவந்தது. இதில் தெற்காசியா நாடுகள் முக்கியமானவை.
சராசரியை விட கூடுதலான வெப்பநிலையை அனுபவிக்கும் குழந்தைகள், சராசரி வெப்பநிலையை அனுபவிக்கும் குழந்தைகளை விட 1.5 ஆண்டுகள் குறைவான பள்ளிப் படிப்பையே பெறுகின்றனர்.
சீனாவில் அதிக வெப்பநிலை காரணமாக, செயல்திறனை குறைத்ததுடன், உயர்நிலை மற்றும் கல்லூரி நுழைவு விகிதங்களை குறைத்தது.

அமெரிக்காவில் ஏசி இல்லாத பள்ளகளில் அதிகமான ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம், தேர்வு மதிப்பெண்களை 1 சதவீதம் குறைத்தது. மிகவும் வெப்பமான பள்ளி நாட்கள் ஆப்ரிக்க, அமெரிக்கா மற்றும் ஹிஸ்பானிக் மாணவர்களை பாதித்தன.

வெப்பத்தில் இருந்து தப்பிக்க பல பள்ளிகள் காற்றோட்டம், ஏசி அமைப்புகளை புதுப்பித்தல் மற்றும் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

பிரேசிலில் மிகவும் பின்தங்கிய நகராட்சிகளில் அதிகரித்துவரும் வெப்பநிலை காரணமாக மாணவர்கள் ஆண்டுக்கு சுமார் 1 சதவீதம் கல்வி கற்பதை இழந்தனர்.

2019 ல் அதிக பருவநிலை நிகழ்வுகள் காரணமாக 10 நாடுகள் பாதிக்கப்பட்டன. இதில் 8 நாகள் குறைந்த வருமானம் கொண்டவை. மோசமான பருவநிலை காரணமாக அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள் என 33 நாடுகளை கணக்கிடப்பட்டன. அங்கு 100 கோடி பேர் வாழ்கின்றனர்.
2013 ல் இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் வெள்ளம் காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு செல்வது பாதிக்கப்பட்டது. பள்ளிகள் நிவாரண மையங்களாக மாறின. பல பள்ளிகள் சேதமடைந்தால் பூட்டப்பட்டன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement