வெயிலில் தவித்த வீரர்களுக்கு உதவிய பஞ்சாப் சிறுவனின் கல்விச் செலவை ஏற்றது ராணுவம்

6


பெரோஸ்பூர்: சண்டிகர்: ' ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நாட்டை காத்த வீரர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக தண்ணீர், பால், லஸ்சி கொடுத்து உதவிய சிறுவனின் கல்விச் செலவை இந்திய ராணுவம் ஏற்றுக் கொண்டது.


'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது, ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரையில், நமது ராணுவ வீரர்கள் இரவு பகல் பாராமல் பாதுகாத்து வந்தனர். அவர்களுக்கு அப்பகுதி மக்கள் ஒத்துழைப்பு வழங்கி ஆதரவு அளித்தனர்.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தின் தாராவாலி என்ற கிராமத்திலும் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல், ராணுவ வீரர்கள் நாட்டை பாதுகாத்து வந்தனர்.அதனை பார்த்த அக்கிராமத்தை சேர்ந்த ஷ்ரவன் சிங் என்ற 10 வயது சிறுவனுக்கு, அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

அந்தச் சிறுவனுக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது. இதனால், பயப்படாமல் அவர்கள் அருகில் சென்ற அந்த சிறுவன், அவர்களுக்கு பால் , லஸ்சி, தண்ணீர் மற்றும் ஐஸ் கிரீம் உள்ளிட்டவற்றை அவர்களுக்கு வழங்கினார். அதனை வீரர்களும் சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டனர். இதனை ஒரு நாள் மட்டும் செய்யாமல் தொடர்ந்து செய்து வந்தான். இதையறிந்த ராணுவ வீரர்கள், சிறுவனை அழைத்து பாராட்டி நினைவுப்பரிசு வழங்கியதுடன், விருந்து அளித்து கவுரவித்தனர்.

இந்நிலையில், இந்த சிறுவனின் முழு கல்விச் செலவையும் ஏற்பதாக இந்திய ராணுவத்தின் மேற்கு பிராந்தியம் அறிவித்துள்ளது.

பெரோஸ்பூரின் கன்டோன்மென்ட்டில் நடந்த நிகழ்ச்சியில், மேற்கு பிராந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் குமார் கதியார், ஷ்ரவன் சிங்கை பாராட்டியதுடன், பஞ்சாப் மக்கள் மற்றும் ராணுவத்துக்கு இடையிலான பிணைப்பை எடுத்துக்கூறியதடன், இதனை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

அப்போது, ஷ்ரவன் சிங்கின் முழு கல்விச் செலவையும் இந்திய ராணுவம் ஏற்றுக் கொள்ளும் என அறிவித்த அவர், இந்த நடவடிக்கையானது, நாட்டின் எல்லையை பாதுகாத்தல் என்ற உறுதிமொழியை மட்டும் அல்லாமல், தனது எதிர்காலத்தையும் உறுதி செய்யும் எனக்கூறினார்.

Advertisement