மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. தற்போது நடைபெறும் மற்றும் முடிவுற்ற பணிகளை கலெக்டர் பிரசாந்த் முன்னிலையில், உயர்கல்வித்துறை அரசு செயலாளரான, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் நேற்று ஆய்வு செய்தார்.

கொங்கராயபாளையத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.88.64 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய தார் சாலை, நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.89.06 லட்சம் மதிப்பில் புதுஉச்சிமேடு ஊராட்சியில் அமைக்கப்பட்ட தார் சாலை பணிகளை பார்வையிட்டனர். அப்போது, சாலையின் நீளம், உயரம், தரம், கட்டுமானப்பொருட்களின் உறுதித்தன்மை உள்ளிட்டவற்றை அளவீடு செய்து, ஆய்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து, உளுந்துார்பேட்டை மற்றும் திருக்கோவிலுார் நகராட்சிகளில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சிமெண்ட் சாலை பணிகள், திருக்கோவிலுார் - ஆசனுார் வரையிலான சாலை அகலப்படுத்தும் பணி, புல்லுாரில் சேதமடைந்த சாலை புதுப்பிக்கும் பணிகள் குறித்து ஆய்வு நடந்தது.

அதைத் தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், சாலை பணிகள் உரிய திட்ட மதிப்பீட்டின்படி நடைபெற வேண்டும், முடிவுற்ற பணிகளை பராமரிக்க வேண்டும், தரமான கட்டுமான பொருட்களைக் கொண்டு பணிகளை முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அப்போது, திருக்கோவிலுார் துணை ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், நகராட்சி ஆணையர்கள், பி.டி.ஓ.,க்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Advertisement